Published : 13 Jun 2014 05:06 PM
Last Updated : 13 Jun 2014 05:06 PM

சிவில் சர்வீஸ்: கோவை மையத்தில் 10 பேர் தேர்வு

கோவையில் உள்ள இலவச உயர் கல்வி மையத்தில் பயின்ற 10 பேர், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. கோவை அரசு கலைக் கல்லூரியில் குடிமைப் பணி தேர்வுகளுக்கான இலவச உயர் கல்வி மையம் செயல்பட்டு வருகிறது. கல்லூரி பேராசிரியர் பி.கனகராஜ், பயிற்சி அளித்து வருகிறார். மாநகராட்சியின் உதவியுடன் 2011-ம் ஆண்டு முதல் உயர் கல்வி மையம் செயல்பட்டு வருகிறது.

தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் இந்த மையத்தில் பயின்று வருகின்றனர். 2013-ம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில், இந்த மையத்தில் படித்த 10 பேர் வெற்றி பெற்றுள்ளனர். கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த கே.பி.கார்த்திகேயன் 69-வது இடமும், சேலத்தை சேர்ந்த எஸ்.சந்திரசேகர் 220-வது இடமும், பி.விக்னன் 382-வது இடமும், நாமக்கல்லைச் சேர்ந்த சக்தியா கிருஷ்ணன் 652-வது இடமும், பொள்ளாச்சியைச் சேர்ந்த ஜி.தீபக் 698-வது இடமும், கோவை தேவராயபுரத்தைச் சேர்ந்த கே.சரவணக்குமார் 722-வது இடமும், ஈரோடு மாவட்டம், கொடிவேரியைச் சேர்ந்த டி.சித்தார்தன் 736-வது இடமும், பேராவூரணியைச் சேர்ந்த ராசிக் பரித் 781-வது இடமும், கோவையைச் சேர்ந்த கார்த்திக் 394-வது இடமும், ஏ.பிரதீப் 950-வது இடமும் பிடித்துள்ளனர்.

இதுகுறித்து அரசு கலைக் கல்லூரி பேராசிரியரும், இலவச ஐ.ஏ.எஸ். தேர்வு பயிற்றுநருமாகிய பி.கனகராஜ் கூறியது:

சமூக சேவையின் அடிப்படையில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறேன். மாநகராட்சி சார்பில் மையத்திற்காக கட்டிடம் வழங்கப்பட்டுள்ளது.

பொது அறிவு, புவியியல் உள்ளிட்ட பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதுவரை இப்பயிற்சி மையத்தில் பயின்ற 36 பேர் வெற்றி பெற்று பஞ்சாப், பீகார், மேற்கு வங்கம், கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பணிபுரிகின்றனர். ஆரம்ப காலத்தில் 5 ஆண்டுகளாக எனது குடியிருப்பில் வகுப்புகளை நடத்தி வந்தேன்.

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வுகளுக்கு சிறப்பு வகுப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு மட்டும் 95 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் மையத்துக்கு வந்து மாணவர்களுடன் உரையாடி உள்ளனர். தற்போதுள்ள வகுப்பறையில் 50 பேர் மட்டுமே அமர்ந்து படிக்க முடியும் என்பதால், ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் சிறப்பு வகுப்புகளுக்கு ஆயிரம் பேர் அமர்ந்து படிக்கும் அளவுக்கு இடவசதியை எதிர்பார்க்கிறோம். இது அமையும் பட்சத்தில், நாட்டின் வரைபடத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு இலவச பயிற்சியில் கோவை இடம்பெறும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x