Last Updated : 22 Jun, 2022 05:09 PM

 

Published : 22 Jun 2022 05:09 PM
Last Updated : 22 Jun 2022 05:09 PM

நடைமேடைகளில் மேற்கூரை இல்லாத அரியலூர் ரயில் நிலையம்: வெயில், மழை நேரங்களில் அவதிக்குள்ளாகும் பயணிகள்

அரியலூர்: அரியலூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான நடைமேடைகளில் மேற்கூரைஅமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தென் தமிழகத்துக்கு இயக்கும் ரயில்களில் பெரும்பாலானவை அரியலூர், திருச்சி,மதுரை வழியாக செல்கின்றன. அரியலூர் ரயில் நிலையத்தில் மொத்தமுள்ள 4 நடைமேடைகளில் 4-வது நடைமேடை வழியாக சரக்கு ரயில்கள் சென்று வருகின்றன.

எஞ்சிய3 நடைமேடைகளில், 1, 2 ஆகியவற்றில் சென்னையிலிருந்து திருச்சி செல்லும் ரயில்களும், 3-ல் திருச்சியிலிருந்து சென்னை செல்லும் ரயில்களும் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.

அரியலூர் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் விழுப்புரம், சென்னை, திருப்பதி மற்றும் திருச்சி, மதுரை, கேரளம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.

ஆனால், இந்த ரயில் நிலையத்தில் எந்த நடைமேடையிலும் மேற்கூரை இல்லை.நிலைய மேலாளர் அலுவலகம் அமைந்துள்ளஇடத்தில் மட்டும் 2 ரயில் பெட்டிகள் நீளத்துக்கு மட்டுமே மேற்கூரை உள்ளது.

இதன் காரணமாக வெயில், மழை நேரங்களில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், பயணிகளுக்கு போதிய இருக்கை வசதிகளும் நடைமேடைகளில் இல்லை.

குறைந்த கட்டணத்தில், பாதுகாப்பான பயணத்தை நாடி ரயிலில் பயணிக்க வரும் பொதுமக்களை, நடைமேடைகளிலேயே அவதியை அனுபவிக்க வைக்கும் ரயில்வே நிர்வாகத்தின் இந்த அலட்சியம் வேதனை அளிப்பதாக உள்ளது என்கின்றனர் பயணிகள்.

இதுதொடர்பாக ஹிந்து மஸ்தூர் சபா சிமென்ட் தொழிலாளர் பிரிவு அகில இந்திய துணைப் பொதுச் செயலாளர் மா.மு.சிவக்குமார், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:

அரியலூர் ரயில் நிலையத்திருந்து தினமும் வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் சுமார் 1,000 பேர் செல்கின்றனர். ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான மிகவும் அத்தியாவசியமான தேவைகளில், நடைமேடைகளில் அமைக்கப்படும் மேற்கூரை மிக முக்கியம்.

ஆனால், அரியலூர் ரயில் நிலைய நடைமேடைகளில் மேற்கூரை அமைத்துத் தரக் கோரி பலமுறை மனு கொடுத்தும் அலட்சியமாக உள்ளனர். இதனால், ரயிலில் பயணிக்க வரும் முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் திறந்தவெளியில் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். ரயில் பயணிகளின் அடிப்படைத் தேவையில் ரயில்வே நிர்வாகம் இவ்வளவு அலட்சியம் காட்டுவது வேதனையளிப்பதாக உள்ளது.

வெயில், மழையில் பயணிகள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் அரியலூர் ரயில் நிலைய நடைமேடைகளில் உடனடியாக மேற்கூரை அமைக்க வேண்டும். மேலும், பாசஞ்சர் ரயிலில் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். விருத்தாசலம்- திருச்சி இடையே இயக்கப்பட்டு, கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பாசஞ்சர் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x