Published : 22 Jun 2022 06:48 PM
Last Updated : 22 Jun 2022 06:48 PM
சென்னை: தாய் - சேய் நல ஊட்டச்சத்து பெட்டக டெண்டரில் இரண்டு நிறுவனங்கள் கோரிய தொகை மற்றும் பாலாஜி நிறுவனத்திற்கு டெண்டர் வழங்க முடிவு செய்தது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவனைகளில் குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு அரசு சார்பில் தாய் - சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும். இதில் தாய் மற்றும் சேய் ஆகியோரின் ஊட்டச்சத்துகளை அதிகரிக்கும் வகையில் பல பொருட்கள் இடம்பெற்றிருக்கும்.
இந்த தாய் - சேய் நலப் பெட்டகத்தில் அரசின் நிர்பந்தத்தால் ஆவின் பொருள் புறக்கணிக்கப்பட்டதாலும், தனியார் நிறுவனம் மூலம் இரும்புச் சத்து திரவம் கொள்முதல் செய்ததாலும் தமிழக அரசுக்கு 77 கோடி ரூபாய் நஷ்டம் என்று கடந்த ஜூன் 5-ம் தேதி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
குறிப்பாக, அனிதா டெக்ஸ் கார்ட் நிறுவனத்திற்கு ரூ.450 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட உள்ளதாகவும், உயிருக்கே அச்சம் தரும் பொங்கல் தொகுப்பை வழங்கியது இந்த நிறுவனம்தான் என்றும் அண்ணாமலை குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையிலும் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதற்கு அன்றைய தினமே பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "டெண்டர் பணிகள் முடிவடையும் முன்பாக ஊழல் நடைபெற்று உள்ளது, நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது. இரண்டு நாட்களுக்கு பின்னரே அந்த டெண்டர் ஓபன் செய்யப்பட உள்ளது" என்று தெரிவித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 14-ம் தேதி டெண்டர் திறக்கப்பட்டது. இந்த டெண்டரில் எல்1 நிறுவனமாக பாலாஜி சர்ஜிக்கல் என்ற நிறுவனம் தேர்வு பெற்று இருந்தது. அண்ணாமலை கூறிய நிறுவனம் எல்1 நிறுவனமாக தகுதி பெறவில்லை.
இது தொடர்பாக பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "அண்ணாமலை கூறிய நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்படவில்லை. வேறு ஒரு நிறுவனத்திற்கு டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலை சொன்ன நிறுவனம் 2-வது இடத்திற்கு போய்விட்டது. எனவே, முதல் இடத்தில் உள்ள நிறுவனத்திற்குதான் இந்தப் பணி ஆணை வழங்கப்படும். இதை டெண்டர் கமிட்டி இறுதி செய்யும். அண்ணாமலை வருத்தம் தெரிவிக்காவிடில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இந்நிலையில், அனிதா டெக்ஸ் கார்ட் மற்றும் பாலாஜி சர்ஜிக்கல் ஆகிய இரண்டு நிறுவனங்கள் முதன்முதலில் டெண்டர் கோரிய தொகை மற்றும் பாலாஜி நிறுவனத்திற்கு டெண்டர் வழங்க முடிவு செய்தது ஏன் என்பது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி தொழில்நுட்ப டெண்டர் இறுதி செய்யப்பட்டு, தொகை கோரும் நிலையில் நிலைக்கு அனிதா மற்றும் பாலாஜி ஆகிய 2 நிறுவனங்கள் தகுதி பெற்று இருந்தன. இந்த நிறுவனங்கள் மொத்தம் 8 பொருட்களை தொகையை டெண்டரில் கோரி இருந்தன. அந்த தொகையின் விவரம்:
பாலாஜி சர்ஜிக்கல்ஸ் (ஜிஎஸ்டி இல்லாமல்)
ஹெல்த் மிக்ஸ் (1கிலோ) - ரூ.852
இரும்பு சத்து திரவம் 200மி.லி (3) - ரூ.224
Albendazole மாத்திரை - ரூ.3.90
காட்டன் துண்டு (1) - ரூ.37
பேரீச்சபழம் (1கிலோ) - ரூ.242.10
உணவு வைக்கும் கப் - ரூ.24.00
பிளாஸ்டிக் வாளி - ரூ.307
ஆவின் நெய் (500 மிலி) - ரூ.196.00
அனிதா டெக்ஸ்கார்ட் (ஜிஎஸ்டி இல்லாமல்)
ஹெல்த் மிக்ஸ் (1கிலோ) - ரூ.849
இரு சத்து திரவம் 200மி.லி (3) - ரூ.221
Albendazole மாத்திரை - ரூ.4
காட்டன் துண்டு (1) - ரூ.50
பேரீச்சபழம் (1கிலோ) - ரூ.232
உணவு வைக்கும் கப் - ரூ.30
பிளாஸ்டிக் வாளி - ரூ.314
ஆவின் நெய் (500 மிலி) - ரூ.196
இந்த விலைப்பட்டியலின்படி 8 பொருட்கள் கொண்ட இந்த டெண்டரில் அனிதா டெக்ஸ்கார்ட் நிறுவனம் மொத்தம் 1,896 ரூபாய்க்கு டெண்டர் கோரி இருந்தது. பாலாஜி சர்ஜிக்கல் நிறுவனம் 1,886 ரூபாய்க்கு டெண்டர் கோரிக்கை இருந்தது. இதன்படி பார்த்தால் அனிதா நிறுவனத்தை விட பாலாஜி நிறுவனம் 10 ரூபாய் குறைவாக கோரி இருந்தது.
இதனைத் தொடர்ந்து விலையை மேலும் குறைக்கக் கோரி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் பாலாஜி நிறுவனம் மேலும் விலையை குறைத்தது.
இதன்படி பாலாஜி சர்ஜிக்கல்ஸ் நிறுவனம் (ஜிஎஸ்டி இல்லாமல்)
ஹெல்த் மிக்ஸ் (1கிலோ) - ரூ.845
இரு சத்து திரவம் 200மி.லி (3) - ரூ.221
Albendazole மாத்திரை - ரூ.3.50
காட்டன் துண்டு (1) - ரூ.37
பேரீச்சபழம் (1கிலோ) - ரூ.232
உணவு வைக்கும் கப் - ரூ.24
பிளாஸ்டிக் வாளி - ரூ.307
ஆவின் நெய் (500 மிலி) - ரூ.196
என்று விலையை குறைக்க ஒப்புக் கொண்டது. இதன்படி 1,865.50 ரூபாய்க்கு இந்த பொருட்கள் வழங்க பாலாஜி சர்ஜிக்கல் நிறுவனம் முன்வந்தது. இதன் காரணமாக டெண்டரை இந்த நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT