Published : 22 Jun 2022 02:05 PM
Last Updated : 22 Jun 2022 02:05 PM

“வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 50 கிமீ பயணிப்பது மக்களுக்கு விதிக்கப்படும் தண்டனை” - ராமதாஸ்

பாமக நிறுவனர் ச.ராமதாஸ் | கோப்புப் படம்

சென்னை: "வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணம் செய்ய வேண்டும் என்பது நியாயமல்ல... அது மக்களுக்கு விதிக்கப்படும் தண்டனையாகவே பார்க்கப்படும். புதிய மாவட்டங்கள், வட்டங்கள் கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக புதிய மாவட்டங்கள், வட்டங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட பெரும்பாலான கோரிக்கைகள் தமிழக அரசால் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இது குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல இடங்களில் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரிஷிவந்தியத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல பத்தாண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஆத்தூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், இப்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரிஷிவந்தியம் நகரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ரிஷிவந்தியம் நகரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் அமைக்கப்படும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. மாறாக வானாபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் அறிவித்தார்.

ரிஷிவந்தியம் தனி வட்டம் கோரிக்கை 30 ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வரும் போதிலும், முதல்வரே வாக்குறுதி அளித்தும் கூட அக்கோரிக்கை நிறைவேற்றப்படாததைக் கண்டித்து ரிஷிவந்தியம் பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் தொடர்ந்து அறப்போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த மே 9-ஆம் தேதி ரிஷிவந்தியம் பகுதியைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நியாயவிலைக்கடை குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்தினார்கள். அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் பேச்சு நடத்தி, ரிஷிவந்தியத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து மக்கள் திரும்பிச் சென்றனர். ரிஷிவந்தியம் புதிய வட்டம் கோரி தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

புதிய வட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள வானாபுரம், இப்போதைய வட்டத் தலைநகரமான சங்கராபுரத்தில் இருந்து வெறும் 10 கி.மீ தொலைவில் உள்ளது. ஆனால், புதிய வட்டமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று கோரப்படும் ரிஷிவந்தியம் சங்கராபுரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி வழியாக 50 கி.மீ தொலைவில் உள்ளது. புதிய வட்டத் தலைநகரமான வானாபுரம், ரிஷிவந்தியத்தில் இருந்து கள்ளக்குறிச்சி வழியாக 60 கி.மீ தொலைவில் உள்ளது. ரிஷிவந்தியத்திலிருந்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்ல 50கிமீ பயணிக்க வேண்டும் என்பதற்காகத் தான் அப்பகுதி மக்கள் புதிய வட்டம் கோரினார்கள். ஆனால், 50 கி.மீக்கு பதிலாக 60 கி.மீ செல்லுங்கள் என்று மக்களை அலைய விடுவது எந்த வகையில் நியாயம்?

ரிஷிவந்தியம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும்; புதிய வட்டங்களை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வருகின்றன. 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போதும் கும்பகோணம், விருத்தாசலம், பொள்ளாச்சி உள்ளிட்ட பல புதிய மாவட்டங்களும், புதிய வட்டங்களும் உருவாக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

பரபரப்பாகி விட்ட வாழ்க்கைச் சூழலில் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான சான்றிதழ்களையும், உரிமைகளையும் பெறுவதற்காக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணம் செய்ய வேண்டும் என்பது நியாயமல்ல... அது மக்களுக்கு விதிக்கப்படும் தண்டனையாகவே பார்க்கப்படும்.

எனவே, மக்களின் நலன் கருதி, வானாபுரம் வட்டத்தை தொடர்ந்து செயல்பட அனுமதிப்பதுடன், ஏற்கனவே வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு ரிஷிவந்தியத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டத்தை உருவாக்க வேண்டும். அதேபோல், முந்தைய அதிமுக ஆட்சியில் ரிஷிவந்தியத்திற்கு அறிவிக்கப்பட்ட தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை உடனடியாக தொடங்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் புதிய மாவட்டங்கள், வட்டங்கள் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x