Published : 21 Jun 2022 02:35 PM
Last Updated : 21 Jun 2022 02:35 PM

இன்று உலக யோகா தினம்: ராமேசுவரத்தில் பிரபலமாகி வரும் ‘கடல்’ யோகா

ராமேசுவரம் கடலில் சூரிய உதயத்தின்போது சறுக்கு பலகையில் யோகா பயிற்சியில் ஈடுபட்டோர். படம்: எல்.பாலச்சந்தர்

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் கடலில் சறுக்குப் பலகையில் அமர்ந்து செய்யும் யோகா பிரபலமாகி வருகிறது.

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பரில் அறிவித்தது. அதன் பின் 2015-ம் ஆண்டு முதல் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ராமேசுவரம் தீவில் உள்ள மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி, பாம்பன் கால்வாய் ஆகிய பகுதிகள் நீச்சல், துடுப்புப் படகு, பெடல் படகு, அலைச் சறுக்கு உள்ளிட்ட நீர் விளையாட்டுகளை மேற்கொள்ள சிறந்த இடங்களாக உள்ளன.

இதனால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், வெளிமாநில சுற்றுலாப் பயணிகளும் இங்கு அதிக அளவில் வருகை தரு கின்றனர். இவர்கள் கடல் தண்ணீரில் சறுக்குப் பலகை மீது உடற்பயிற்சி செய்ய ஆர்வம் காட்டுகிறனர். சமீபகாலமாக யோகா பயிற்சிகளையும் செய்து வருகின்றனர்.

சறுக்குப் பலகை தண்ணீரில் நன்றாக மிதக்கக் கூடியது. முதலில் சிறிய ஆசனங்கள் செய்து கற்றுக் கொண்ட பின்னர் நுணுக்கமான ஆசனங்களை செய்யலாம். கடலில் யோகா செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியமும் மன வலிமையும் அதிகரிக்கும் என்று இப்பயிற்சியை அளித்து வரும் பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக ராமேசுவரத்தில் குவெஸ்ட் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் அகாடமியை நடத்திவரும் ஜெஹான், உபாஸ்னா மோடி தம்பதி கூறியதாவது: ராமேசுவரம் கடல் பகுதியில் துடுப்புப் படகு, பெடல் படகு, அலைச் சறுக்கு, காத்தாடி சறுக்கு, ஸ்கூபா டைவிங் உள்ளிட்டவை கற்றுத் தரப்படுகிறது.

இந்த நீர் விளையாட்டுகளை கற்றுக்கொள்வதற்கு சமநிலை, நெகிழ்வுத்தன்மை ஆகியவை மிகவும் முக்கியம். இவற்றை ஒருங்கிணைக்க யோகா சிறப்பான கருவியாகச் செயல்படுகிறது.

யோகாவில் பல ஆசனங்கள் உள்ளன. இதில் நீர் விளையாட்டுக்கு அதோ முக சவாசனா, விருக்ஷாசனம், வீரபத்ராசனம், நமஸ்காராசனம் ஆகிய ஆசனங் கள் நீர் விளையாட்டுக்கு மிகவும் பயனளிக்கக் கூடிய ஆசனங்களாகும்.

அதோ முக சவாசனா செய்வதால் தொடை எலும்பு, கை மற்றும் தோள்பட்டை வலிமை அடையும். விருக்ஷாசனம் சமநிலையை மீட்டெடுப்பதற்கு உதவும். நீர் விளையாட்டு களின்போது அலைகளை சமாளித்து நிற்க சிறந்த பயிற்சியை அளிக்கும். வீரபத்ராசனம் உடலை சமநிலைப்படுத்தும். நமஸ்காராசனம் அடிவயிற்றுக்கும், முதுகுக்கும் நன்மை தரக்கூடியது என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x