Published : 21 Jun 2022 01:37 PM
Last Updated : 21 Jun 2022 01:37 PM

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு பாதுகாப்பு கோரிய வழக்கு: காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | வாதங்களின் முழு விவரம்

சென்னை: அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க கோரிய வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பொதுக்குழு அட்டவணை, ஓபிஎஸ் அளிக்கும் மனு ஆகியவற்றை ஆராய்ந்து முடிவெடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சரும் , திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான பெஞ்சமின் தாக்கல் செய்துள்ள மனுவில், வரும் 23-ம் தேதி வானகரத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொள்கின்றனர். மேலும், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களான 2,500 பேர் இதில் பங்கேற்கவுள்ளனர்.

எனவே, இந்தக் கூட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குவது அவசியம். எனவே, அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி கடந்த 7-ம் தேதி தமிழக காவல்துறை டிஜிபி மற்றும் ஆவடி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்த மனு மீது இதுவரை எந்த முடிவும் எடுக்காததால், கடந்த 15-ம் தேதி மீண்டும் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவின் மீதும் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தப்படுகிறது. எனவே, வரும் 23-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க காவல்துறை டிஜிபி, ஆவடி காவல் ஆணையர் மற்றும் திருவேற்காடு காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான, தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, “காவல்துறை பாதுகாப்பு வழங்க கோரிய மனுவில், பொதுக்குழுவின் கால அட்டவணை எதுவும் இடம்பெறவில்லை. எனவே இந்த வழக்கின் விசாரணையை நாளைக்கு தள்ளிவைக்க வேண்டும்.

பொதுக்குழு தொடர்பாக ஏதாவது பிரச்சினை வரும் என தெரிந்தால் அக்கட்சியின் ஒருங்கிணைபாளர் ஓ.பன்னீர்செல்வம் காவல்துறையை நாடலாம். பாதுகாப்பு தொடர்பான மனு அளிக்கப்பட்டபோது, காவல்துறை தரப்பில் 26 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அதற்கு அதிமுக தரப்பில் பதிலளிக்கவில்லை” என்று வாதிட்டார்.

அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், பெஞ்சமின் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். “பொதுக்குழுவைக் கூட்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கே அதிகாரம் உள்ளது. எனவே, பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு வழங்க கோரி அவர்கள் இருவர்தான் மனு தாக்கல் செய்ய முடியும். ஆனால், பொதுக்குழுவில் ஓர் அழைப்பாளராக கலந்துகொள்ளவிருக்கும் மூன்றாவது நபரால் தனிப்பட்ட முறையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல” என்றார்.

மேலும், மனுவில் யாரோ பிரச்சினை செய்வார்கள், கலவரம் நடக்கும் என்றெல்லாம் மனுவில் குறிப்பிட்டுள்ளதாக வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “பெஞ்சமின் பொதுக்குழு உறுப்பினர் இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது ஓபிஎஸ் தரப்பில், “பொதுக்குழு உறுப்பினர்தான். ஆனால், பாதுகாப்பு கோரி வழக்கு தொடர முடியாது. பொதுக்குழு கூட்டுவதில் உள்ள பிரச்சினை குறித்து காவல்துறையை அணுகுவோம்” என்று வாதிட்டார். அப்போது மனுதாரர் பெஞ்சமின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “பொதுக்குழுவுக்கு 2600 பேர் வரை வருகை தருவார்கள். அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். அனைத்து வாகனங்களுக்கும் பாஸ் வழங்கப்படும்” என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, “எம்பி, எம்எல்ஏ உள்பட யாராக இருந்தாலும் உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

“காவல்துறை எந்தத் தரப்பு என்றெல்லாம் பார்க்காமல், அனைத்து தரப்புக்கும் பாதுகாப்பு அளித்து சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும். அதிமுக பொதுக்குழு அட்டவணை, ஓபிஎஸ் அளிக்கும் மனு ஆகியவற்றை ஆராய்ந்து காவல் துறை முடிவெடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.

“காவல்துறை தரப்பில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு அதிமுக பதிலளிக்க வேண்டும்” என்றும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x