Published : 21 Jun 2022 11:44 AM
Last Updated : 21 Jun 2022 11:44 AM
சென்னை: அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரி தாக்கல் செய்த கூடுதல் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக் கூறி அக்கட்சி உறுப்பினர்களான ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அந்த மனுவில், பொதுச் செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த அதிமுக உட்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் புதிய நியமனங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களைக் கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தடை விதிக்கக் கோரி கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், கட்சி விதிகள்படி நிர்வாக ரீதியாக பொதுச் செயலாளருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களான பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டுதல், கட்சி ஆட்சிமன்ற குழு அமைத்தல் மற்றும் உட்கட்சி தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிடுதல் போன்றவற்றை அதிமுக கட்சி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் செயல்படுத்த தடை விதிக்கக் கோரப்பட்டுள்ளது.
மேலும், கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வர தடை விதிக்க வேண்டும். செயற்குழுவால் நியமிக்கப்பட்ட தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் பதவியில் நீடிக்க தடை விதிக்க வேண்டும். கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர்களை நீக்கவும், புதியதாக கட்சி பதவிகளில் நியமனம் செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்று இடைக்கால மனுவில் கோரியிருந்தனர்.
இந்நிலையில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி இந்த கூடுதல் மனுக்களை நாளை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி நாளை விசாரிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT