Published : 21 Jun 2022 11:12 AM
Last Updated : 21 Jun 2022 11:12 AM
சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் 8-வது நாளாக இன்றும் தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் வரும் 23-ம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டம் தொடர்பான மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் தலைமையகத்தில் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின், செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் கட்சிக்கு ஒற்றைத் தலைமை அவசியம் என்ற கருத்தைப் பதிவு செய்ததாகவும், யார் அந்த ஒற்றைத் தலைமை என்பதை கட்சி முடிவு செய்யும் என்றும் கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை விவகாரம் பேசுபொருளானது. ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் மாறிமாறி போஸ்டர்களை ஒட்டினர். மேலும், கட்சியின் மூத்த நிர்வாகிகள், இருவரையும் தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோரும் தங்களுடைய ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், 23-ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டத்தை தள்ளி வைக்க கோரி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைத்திலிங்கம் சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. இக்கடிதம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது, கடிதம் வரவில்லை என்று கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
8-வது நாளாக ஆலோசனை: பொதுக்குழுக் கூட்டத்திற்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தங்களது இல்லங்களில் ஓபிஎஸ், இபிஎஸ் தங்களது ஆதரவாளர்களுடன் 8-வது நாளாக ஆலோசனை நடத்தினர். அதிமுக மூத்த உறுப்பினர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட பலர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திலும், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திலும் ஆலோசனை நடத்தினர்.
ஓபிஎஸ் இல்லத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது பொதுக்குழுவை தள்ளிவைக்க கோரி அனுப்பிய கடிதம் வரவில்லை என்று கே.பி.முனுசாமி கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்," அதாவது அவர்கள் இன்னும் தலைமைக் கழகத்தோடு தொடர்பில் இல்லாமல் இருக்கிறார்கள் என்று அர்த்தம். கடிதத்தை தலைமைக் கழக நிர்வாகி மகாலிங்கத்திடம் கொடுத்து கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது. இப்போது இந்த பொதுக்குழு விவகாரம் நீதிமன்றம் சென்றுள்ளது. நீதிமன்ற உத்தரவு என்ன சொல்கிறதோ, பார்த்துக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT