Published : 21 Jun 2022 04:15 AM
Last Updated : 21 Jun 2022 04:15 AM
சென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பில் 90 சதவீதம் பேரும், பிளஸ் 2-வில் 93.76 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தை பொறுத்தவரை பிளஸ் 2-வில் பெரம்பலூர் மாவட்டமும், பத்தாம் வகுப்பில் கன்னியாகுமரி மாவட்டமும் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளன.
தமிழக பள்ளிக்கல்வியில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் நடத்தப்படுவது வழக்கம். கரோனா வைரஸ் தொற்று பரவலால் கடந்த 2020-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. அதேபோல, 2021-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. தேர்வை ரத்து செய்து மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த கல்வியாண்டில் (2021-22) கரோனா பரவலால் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டது. அதன் காரணமாக பொதுத்தேர்வுகள் மே மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டன. கல்வியாண்டு தாமதத்தை கருத்தில்கொண்டு பாடத்திட்டமும் 35 முதல் 40 சதவீதம் வரை குறைக்கப்பட்டன. காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, திருப்புதல் தேர்வுகள் மூலம் மாணவர்கள் தேர்வுக்கு தயார்படுத்தப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மே 5 முதல் 30-ம் தேதி வரை பொதுத்தேர்வு நடந்தது. இந்த தேர்வை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் உட்பட சுமார் 17 லட்சம் பேர் எழுதினர்.
இந்நிலையில், 10-ம் மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஒரே நாளில் ஜூன் 20-ல் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்திருந்தது. அதன்படி, பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையில் நேற்று காலை 9.45 மணிக்கு வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து பிளஸ் 2 வகுப்புக்கு காலை 10 மணிக்கும், 10-ம் வகுப்புக்கு 12 மணிக்கும் தேர்வு முடிவுகள் தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியாகின. அடுத்த சில நிமிடங்களில் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகள் மாணவர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலமும், பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமும் அனுப்பப்பட்டன.
தேர்வு முடிவுகள் குறித்து அரசு தேர்வுத்துறை தெரிவித்திருப்பதாவது:
இந்த ஆண்டில் பிளஸ் 2 தேர்வை 8 லட்சத்து 6,277 மாணவ, மாணவிகள் எழுதினர். அதில் 7 லட்சத்து 55,998 (93.76 சதவீதம்) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 2020-ம் ஆண்டைவிட 1.4 சதவீதம் அதிகம். மாணவர்கள் 90.96 சதவீதமும், மாணவிகள் 96.32 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த முறையும் மாணவர்களைவிட தேர்ச்சி விகிதத்தில் மாணவிகள் 5.36 சதவீதம் அதிகமாகும்.
இதுதவிர, 246 அரசுப் பள்ளிகள் உட்பட 2,628 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்று சாதித்துள்ளன. 2020-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 2,120-ஆக இருந்தது. மேலும், மாவட்ட அளவிலான தேர்ச்சியில் 97.95 சதவீதத்துடன் பெரம்பலூர் முதலிடம் பெற்றுள்ளது. விருதுநகர் (97.27%), ராமநாதபுரம் (97.02%) மாவட்டங்கள் அடுத்த 2 இடங்களில் உள்ளன. கடைசி இடத்தில் வேலூர் (86.69%) இடம் பெற்றுள்ளது.
இதேபோல, பத்தாம் வகுப்பு தேர்வை 9 லட்சத்து 12,620 மாணவ, மாணவிகள் எழுதினர். அதில் 8 லட்சத்து 21,994 (90.07%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 2019-ம் ஆண்டைவிட 5 சதவீதம் குறைவாகும். மாணவர்கள் 85.83 சதவீதமும், மாணவிகள் 94.38 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களைவிட மாணவிகள் 8.5 சதவீதம் அதிகம்.
பத்தாம் வகுப்பு தேர்வில் 886 அரசுப் பள்ளிகள் உட்பட மொத்தம் 4,006 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்று சாதித்துள்ளன. 2019-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 6,100 ஆக இருந்தது. மாவட்ட அளவிலான தேர்ச்சியை பொறுத்தவரை 97.22 சதவீதத்துடன் கன்னியாகுமரி முதலிடம் பெற்றுள்ளது. பெரம்பலூர் (97.15%), விருதுநகர் (95.96%) மாவட்டங்கள் அடுத்த நிலைகளில் உள்ளன. கடைசி இடத்தில் புதுக்கோட்டை (83%) உள்ளது.
மாணவர்கள் தங்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) இருந்து ஜூன் 24-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம். இணையதள வசதி இல்லாதவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு சென்று நேரடியாக பெற்றுக்கொள்ள வேண்டும். அசல் மதிப்பெண் சான்று விநியோகம், விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தலுக்கான வழிமுறைகள் மற்றும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
குமரி, பெரம்பலூர் முதலிடம்
பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவிலான தேர்ச்சி விகிதத்தில் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. அங்கு 97.22 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கு முன்பு 2012-13 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பிடித்திருந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் முதலிடத்தை பெற்றுள்ளது.
பிளஸ் 2 தேர்வில் 97.95 சதவீத தேர்ச்சியுடன் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. மாவட்டத்தில் 12 அரசுப் பள்ளிகள் உட்பட 34 பள்ளிகள் முழு தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில், 97.15 சதவீத தேர்ச்சியுடன் பெரம்பலூர் மாவட்டம் 2-ம் இடம் பிடித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT