Published : 21 Jun 2022 07:14 AM
Last Updated : 21 Jun 2022 07:14 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை விற்பனை செய்ய வேதாந்தா குழுமம் முடிவு செய்துள்ளது. ஆலையை வாங்க விரும்பும் நிறுவனங்கள் வரும் ஜூலை 4-ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்தின் ஒரு அங்கமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை 1996-ல் உற்பத்தியை தொடங்கியது. ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
ரூ.100 கோடி அபராதம்
இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசடைவதாக கூறி சென்னை உயர் நீதிமன்றம் ஆலையை மூட 2010-ல் உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால் சில நாட்களிலேயே ஆலை மீண்டும் திறக்கப்பட்டது.
2013-ல் ஆலையில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து ஆலையை மூட அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். ஆனால் இம்முறையும் உச்ச நீதிமன்றத்துக்கு சென்று மறுமாதமே ஆலையை ஸ்டெர்லைட் நிறுவனம் திறந்தது. இந்த முறை ஆலைக்கு ரூ.100 கோடி அபராதத்தை உச்ச நீதிமன்றம் விதித்தது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் விரிவாக்கத்துக்கு எதிராக 2018-ல் ஆலை அருகேயுள்ள அ.குமரெட்டியாபுரம் மக்கள் போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்தின் 100-வது நாளை முன்னிட்டு 2018 மே 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடத்தப்பட்ட பேரணி வன்முறையில் முடிந்தது.
அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு, தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தொடர்ந்து 2018 மே 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
அதற்கு பிறகு கடந்த 4 ஆண்டுகளாக ஆலை திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. கரோனா 2-வது அலை உச்சத்தில் இருந்த நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் மட்டும் 3 மாதங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா குழுமம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் சுமார் 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான சட்ட போராட்டம் தொடரும் என வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தார். இந்த சூழ்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக வேதாந்தா குழுமம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அக்குழுமம் சார்பில் நாளிதழ்களில் நேற்று விளம்பரம் வெளியிடப்பட்டது. அதில், ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆண்டுக்கு 4 லட்சம் டன் திறன் கொண்ட தாமிர உருக்காலை பிரிவு, தாமிர சுத்திகரிப்பு பிரிவு, தாமிர கம்பி உற்பத்தி பிரிவு, 160 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையம், கந்தக அமிலம் உற்பத்தி பிரிவு, பாஸ்பாரிக் அமிலம் உற்பத்தி பிரிவு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய ஊழியர் குடியிருப்பு என அனைத்தையும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை வாங்க விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பத்தை இ-மெயில் மூலமாக வரும் ஜூலை 4-ம் தேதி மாலை 6 மணி வரை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலை நிர்வாகம் விளக்கம்
ஆலை நிர்வாகம் வெளியிட்டுஉள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை நாட்டின் மொத்த தாமிர தேவையில் 40 சதவீதத்தை பூர்த்தி செய்து, தாமிர உற்பத்தியில் நாட்டை சுய சார்பு நிலையை நோக்கி அழைத்துச் சென்றதில் முக்கிய பங்காற்றி வந்தது.
நாட்டின் நலன் மற்றும் தமிழக மக்களின் நலன் கருதியும், அதிகரித்து வரும் தாமிர தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் இந்த சொத்தை நல்ல முறையில் பயன்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT