Last Updated : 23 May, 2016 10:17 AM

 

Published : 23 May 2016 10:17 AM
Last Updated : 23 May 2016 10:17 AM

சூடுபிடிக்கத் தொடங்கிய புத்தகப் பைகள் விற்பனை: மழைக் காலத்திலும் பயன்படுத்த ரெயின் கவர் பைகள் அறிமுகம்

கோடை விடுமுறை முடிந்து இன்னும் ஒரு வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. புதிய வகுப்புக்கு செல்லும் மாணவர்கள் பெற்றோரிடமிருந்து முதலில் எதிர்பார்ப்பது புதிய சீருடையையும், புத்தகப் பையையும்தான். அந்த வகையில் தங்கள் பிள்ளைகளின் படிப்புக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் பெற்றோர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், தியாகராய நகர், புரசை வாக்கம், பிராட்வே உள்ளிட்ட சென்னை யின் பல்வேறு பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் பள்ளி மாண வர்களுக்கான புதிய ரக புத்தகப் பைகள், காலணிகள், வாட்டர் கேன்கள், பென்சில் பாக்ஸ்கள் விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

புத்தகப் பைகளில் மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வகைகளில் விற்ப னைக்கு வந்திருக்கின்றன. இவற்றில் சுமார் 30 வகைகள் இந்தாண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மழலையர் வகுப்பு (எல்.கே.ஜி) முதல் மேல்நிலைக் கல்வி வரை பருவம் வாரியாக பள்ளி மாணவர்களின் தேவைக்கேற்ப வகை வகையான புத்தகப் பைகள் சந்தையில் கொட்டிக் கிடக்கின்றன. குறிப்பாக புத்தகப் பைகளின் வெளிப்புறத்தில் டோரா, சோட்டா பீம், மிக்கி மவுஸ், பார்பி போன்ற கார்ட்டூன் கதாபாத்திரங்களின் உருவங்கள் கண்கவர் வண்ணங்களில் அச்சிடப்பட்டிருப்பது மழலையர்களை பெரிதும் கவர்கிறது.

முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்காக ஸ்பைடர் மேன், ஸ்டார் வார்ஸ், பவர் ரேஞ்சர்ஸ் பென் 10 போன்ற கதா பாத்திரங்கள் இடம்பெற்றுள்ள பைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு புதிதாக கார்கள் வடிவி லேயை புத்கப் பைகள் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளன.

மாணவர்கள் புதிய வகுப்புச் செல்லும் போது அவர்களின் புத்தகச் சுமையும் அதிகரிக்கிறது. எனவே, மாணவர்களின் சுமையைக் குறைக்கும்விதமாக ‘டிராலி பேக்’களும் சந்தையில் விற்பனையாகின் றன. இந்த பேக்கை மாணவர்கள் சுமப்ப தற்குப் பதிலாக இழுத்துச் செல்லலாம்.

புத்தகப் பைகளை தயாரிக்கும் நிறுவனம், தயாரிக்க பயன்படுத்தப்படும் துணி வகை ஆகியவற்றுக்கேற்ப விலை நிர்ணயிக்கப்படுகிறது.

அந்த வகையில் கார்டூன் கதாபாத்திரங்கள் அச்சிடப்பட்ட பைகள் குறைந்தபட்சம் ரூ.550 முதல் ரூ.1,300 வரை விற்கப்படுகின்றன. டிராலி வகை புத்தகப் பைகள் குறைந்தபட்சம் ரூ.1,300 முதல் ரூ.2,000 வரை விற்கப்படுகின்றன. சாதாரண புத்தப் பைகள் ரூ.400 முதல் கிடைக்கின்றன.

புதிய அறிமுகம்

பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் புதிய வகை புத்தகப் பைகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு, புதிதாக ரெயின் கவர் வகை பைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதுகுறித்து தியாகராய நகரில் இயங்கி வரும் பிரபல வர்த்தக நிறுவனத்தின் விற்பனை பிரிவு நிர்வாகி ஒருவர் கூறும்போது, “ரெயின் கவர் புத்தக பைகளில் பையை முழுவதுமாக மூடும் வகையில் வாட்டர் புரூப் கவர் இருக்கும். இதனால், மழைக்காலத்திலும் மாணவர்கள் புத்தகங்களை நனையாமல் கொண்டு செல்ல முடியும். இந்த வகை பைகள் குறைந்தபட்சம் ரூ.750 முதல் அதிகபட்ச மாக ரூ.3,000 வரை விற்கப்படுகின்றன.

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டு புத்தகப் பைகளின் விலை சுமார் 5 முதல் 8 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் பள்ளிகள் திறக்க உள்ளதால் வரும் வாரத்தில் புத்தக பைகளின் விற்பனை உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x