Published : 20 Jun 2022 11:29 PM
Last Updated : 20 Jun 2022 11:29 PM
சேலம்: மத்திய அரசின் அக்னி பாதை திட்டம் குறித்து விவரம் தெரியாதவர்களே அதை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். ராணுவ அதிகாரிகளோ, முன்னாள் ராணுவ வீரர்களோ இதுவரை அக்னி பாதை திட்டத்துக்கு எதிரான கருத்துகளை சொல்லவில்லை என்று மன்னார்குடி ஜீயர் தெரிவித்தார்.
சேலம், சின்னகடை வீதியில் உள்ள வேணுகோபாலசாமி கோயிலுக்கு வருகை புரிந்த மன்னார்குடி செண்டலங்கார சென்பக மன்னார் ராமானுஜ ஜீயர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "மத்திய அரசின் அக்னி பாதை திட்டம் குறித்த விவரம் தெரியாதவர்களே அதனை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ அதிகாரிகளோ, முன்னாள் ராணுவ வீரர்களோ இதுவரை அக்னி பாதை திட்டத்துக்கு எதிரான கருத்துகளை சொல்லவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆய்வு தொடர்பாக மீண்டும் இரண்டு நாட்கள் கருத்து கேட்கவுள்ளது ஏற்புடையதல்ல. நீதிமன்ற உத்தரவை மீறி சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் அறநிலையத்துறை தலையிடுவது இந்து விரோத செயல். இந்து கோயில்களின் நிர்வாகத்தில் தலையிடுபவர்கள் பிற மத வழிபாட்டுத்தளங்களில் தலையிட முடியுமா?
திராவிட கட்சிகள் மட்டுமல்ல பாஜக-வே இந்து மத தர்மத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டாலும் எதிர்ப்போம். தமிழகத்தில் தொடரும் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முதல்வரை, இந்து மதப் பெரியவர்கள் சென்று சந்திப்பது வழக்கம் இல்லை. முதல்வர் எங்களை நேரில் வந்து சந்திக்க வேண்டும் என்பது தான் மரபு" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT