Published : 20 Jun 2022 07:11 PM
Last Updated : 20 Jun 2022 07:11 PM
மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் திடீரென தடம் புரண்டதால் மதுரையைக் கடந்து செல்லும் ரயில்கள் சற்று தாமதமாக சென்றன.
மதுரை ரயில் நிலையத்தில் இருந்து அசாம், கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கு சரக்கு ரயில்கள் மூலம் டிராக்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன. இதன்படி, மதுரை வாடிப்பட்டி பகுதியில் இருந்து வடமாநிலத்திற்கு டிராக்டர்களை ஏற்றிச் செல்ல தயாராக 24 பெட்டிகளுடன் கூடிய சரக்கு ரயில் ஒன்று கூடல்நகர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது.
அந்த ரயில் பராமரிப்பு பணிக்கென நேற்று நள்ளிரவு சுமார் 1.15 மணிக்கு மதுரை ரயில் நிலைய வளாகத்திலுள்ள ரயில் பெட்டிகள் பராமரிப்பு பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. ரயில் நிலையத்திற்குள் நுழையும் முன்பாக மதுரா கோட்ஸ் பாலம் அருகே 3வது பிளாட்பாரத்தில் வந்தபோது, திடீரென 2 பெட்டிகள் மட்டும் தடம் புரண்ட நிலையில், அப் பெட்டிகள் நடைமேடையில் அதிக சத்தத்துடன் மோதியது.
இதை அறிந்ததும் இரவு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பணியாளர்கள், அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகளும், காவல்துறையினரும் அங்கு சென்றனர். முதலில் தடம் புரண்ட பெட்டிகளை தவிர்த்து, பிற பெட்டிகளை மீட்பு என்ஜின் மூலம் பத்திரமாக மீட்கும் பணி நடந்தது.
பிறகு தடம் புரண்ட பெட்டிகளை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தி இழுத்துச் சென்றனர். இந்த நேரத்தில் சென்னை மற்றும் பிற வெளியூர்களில் இருந்து நாகர்கோயில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மார்க்கமாக சென்ற ரயில்கள் சிறிது நேரம் காத்திருக்கவேண்டி சூழல் உருவானது. பயணிகளும் உடைமைகளுடன் காத்திருந்தனர்.
இச்சம்பவத்தால் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சில நிமிடம் நிறுத்தப்பட்டது. இருப்பினும், 3வது நடைமேடையை தவிர, பிற நடைமேடைகளின் வழியாகவே ரயில்கள் இயக்கப்பட்டன. இச்சம்பவத்தால் சென்னை, கொல்லம், பெங்களூர், நாகர்கோயில், கோவை- நாகர்கோவில், சென்னை- கன்னியாகுமரி, சென்னை- திருவனந்தபுரம், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் போன்ற பல்வேறு ரயில்களும் சற்று தாமதமாக செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதற்கிடையில், தகவல் அறிந்து சரக்கு ரயில் தடம் புரண்ட பகுதியை இன்று அதிகாலை படமெடுக்க சென்ற நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி புகைப் படக்காரர்கள், செய்தியாளர்களை ரயில்வே அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, கேமராக்களை பிடுங்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
5 பேர் கொண்ட விசாரணை குழு: இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த ரயில் பாதை, ரயில் பெட்டி, சமிக்ஞை பராமரிப்பு பொறியாளர்கள், போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் ரயில் இன்ஜின் ஆய்வாளர் என, 5 பேர் கொண்ட குழுவை கோட்ட ரயில்வே மேலாளர் நியமித்துள்ளார். இக்குழு விசாரணை நடத்தி ஒரு வாரத்திற்குள் அறிக்கை அளிக்க உத்தரவிடப் பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT