Published : 20 Jun 2022 05:25 PM
Last Updated : 20 Jun 2022 05:25 PM
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 10, 12 தேர்வு முடிவுகளில் கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுவையில் கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. தொற்று பரவல் குறைந்ததையடுத்து 2021-22ம் கல்வி ஆண்டில் பள்ளிகள் காலதாமதமாக திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றன. இதையடுத்து, கடந்த மே 6ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வு முடிவு இன்று காலை வெளியானது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் 10-ம் வகுப்பு தேர்வு முடிவை வெளியிட்டு கூறியது: ''கடந்த மே மாதம் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள 292 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் – 8,335, மாணவிகள் – 8,180 என மொத்தம் 16,515 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் – 7,476, மாணவிகள் – 7,870 என மொத்தம் 15,346 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காடு 92.92 சதவீதம் ஆகும். இதில் அரசு பள்ளிகள் 85.01 சதவீதமும், தனியார் பள்ளிகள் 97.54 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.
புதுச்சேரியில் 12 அரசு பள்ளி, 81 தனியார் பள்ளி, காரைக்காலில் ஒரு அரசு பள்ளி, 20 தனியார் பள்ளி என மொத்தம் 114 பள்ளிகள் இந்தாண்டு நூறு சதவீத தேர்ச்சியை அளித்துள்ளன. மேலும், கணிதம் – 34, அறிவியல் – 64, சமூக அறிவியல் – 4 என மொத்தம் 102 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளனர்.
கிராமப்புற பள்ளி மாணவர்கள் பிளஸ்-2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக அளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக, 12 கிராமப்புறப்பள்ளிகள் 10ம் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளன. 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், ஒத்துழைப்பு கொடுத்த அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT