Last Updated : 20 Jun, 2022 05:03 PM

 

Published : 20 Jun 2022 05:03 PM
Last Updated : 20 Jun 2022 05:03 PM

புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் உயர் கல்வி வாய்ப்பு: முதல்வர் ரங்கசாமி உறுதி

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி | கோப்புப் படம்.

புதுச்சேரி: “பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் உயர் கல்வி பயில வாய்ப்புகளை அரசு உருவாக்கும். இடங்கள் அதிகரிக்கப்படும்” என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''பிளஸ்2 தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள். மாணவர்கள் தேர்ச்சிக்கு காரணமாக இருந்த கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள். அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இணைந்து பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை கொடுத்து வருகிறது.

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் உயர் கல்வி பயில்வதற்கான வாய்ப்பை அரசு வழங்கும். குறிப்பாக மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வதற்காக கலை, அறிவியல் பாடப்பிரிவில் கூடுதலாக 874 இடங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் கல்லூரியில் சேர வாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது. சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

உரிய நேரத்தில் சென்டாக் ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை நடத்தப்படும். கல்விக்கட்டணக் குழு பரிந்துரைகளை அளித்துள்ளது. இவற்றை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மதிப்பெண் உள்ளிட்ட கல்வி சான்றிதழ்களை பதிவு செய்வதற்கு தேவையான வசதிகள் செய்துதரப்படும்" என்று குறிப்பிட்டார்.

பள்ளி திறக்கும் நாளில் சீருடை, புத்தகம் வழங்கவும் மாணவர் பஸ்ஸை இயக்கவும் நடவடிக்கை

புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறியது: ''பிளஸ்2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற காரணமாக இருந்த கல்வித் துறை அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் மேற்கல்வி பயில தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைவரும் பிளஸ்-1ல் சேர்வதற்கான தேவையான இடங்கள் ஏற்படுத்தப்படும்.

கடந்த ஆண்டு அறிவியல் பிரிவை விட பிற பிரிவுகளில் மாணவர்கள் படிக்க ஆர்வம் காட்டினர். இந்த ஆண்டு மாணவர்கள் எதற்கு முக்கியத்துவம் அளிப்பார்கள் என தெரியவில்லை. இருப்பினும் மாணவர் விரும்பும் பாடப்பிரிவுகளில் இடங்களை அதிகரிக்க அனுமதி வழங்கி உள்ளோம். வரும் 23ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.

பள்ளிகள் திறக்கும் நாளில் சீருடை, புத்தகம், காலை, மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அன்று முதல் மாணவர்கள் பஸ்கள் இயக்கப்படும். பிளஸ்1 சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பம் அளிக்கப்படும். ஒரு வாரத்தில் மாணவர் சேர்க்கை பணிகள் முடிந்து பிளஸ்1 வகுப்புகள் விரைவில் திறக்கப்படும்" என்று குறிப்பிட்டார்.

மனம் தளராதீர் - ஆளுநர் தமிழிசை

புதுவை ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ''புதுவை, தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகள் மனம் தளராமல் இருக்க வேண்டும். தோல்விகள் வாழ்க்கையில் இயல்புதான், ஆகையால் எந்த விதத்திலும் முயற்சிகளை கைவிடாமல் கடின முயற்சி செய்து படித்து மறுதேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்’' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x