Published : 20 Jun 2022 01:44 PM
Last Updated : 20 Jun 2022 01:44 PM

‘கொதிப்பில் தொண்டர்கள்’ - அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்குமாறு இபிஎஸ்ஸுக்கு ஓபிஎஸ், வைத்திலிங்கம் கடிதம்

சென்னை: "கட்சியின் நலன் கருதி 23.6.2022 அன்று நடைபெறவுள்ள செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தினை தற்போதைக்கு தள்ளி வைக்கலாம்" என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஆகியோர் கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "ஒன்றிய பெருந்தலைவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள் உள்ளிட்டோர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எனக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர்.

கட்சியின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலம் வரை, கடந்தமுறை நடந்த பொதுக்குழு வரை, கடைபிடிக்கப்பட்ட வரைமுறைகளை நீங்கள் பின்பற்றவில்லை என்று கூறி சில கோரிக்கைகளை வைத்துள்ளனர். இதுதொடர்பாக, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த கடிதத்தை அனுப்பியிருக்கிறோம்.

அந்த கடிதத்தின் விவரம்: "23.6.2022 அன்று, நடைபெறவுள்ள கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்திற்கு, சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பது குறித்து விவாதித்து முடிவெடுக்க அதிமுகவின் தலைமைக் கழகமான எம்ஜிஆர் மாளிகையில், 14.6.2022 அன்று மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

பொதுக்குழு நடைபெறவுள்ள மண்டபத்தில், நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம் என்ற தகவலை, தாங்கள் தெரவித்தீர்கள். கூட்டத்திற்கு அழைக்கப்பட்டதன் பொருள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு முடிந்தபிறகு, முன்னறிவிப்பு இல்லாமல், ஒற்றைத் தலைமை இரட்டைத் தலைமை குறித்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

பொதுவாக கழக பிற அணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், வாரியத் தலைவர்கள், மற்றும் கட்சிக்காக தியாகம் செய்த மூத்த முன்னோடிகள் ஆகியோரை சிறப்பு அழைப்பாளர்களாக பொதுக்குழுவுக்கு அழைப்பது நமது கட்சியில் ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறை.

இந்த நடைமுறையை 23.6.2022 அன்று, நடைபெறவுள்ள பொதுக்குழுவில் பின்பற்றப்படாது என்ற தகவலை அறிந்த கட்சித் தொண்டர்கள் எங்களை தொலைபேசி வாயிலாகவும், நேரில் சந்தித்தும் சிறப்பு அழைப்பாளர்களாக தங்களை அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு முன் பலமுறை அதே மண்டபத்தில் பொதுக்குழுவை நடத்திய போதெல்லாம், சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்பட்டனர். இப்போதும்கூட அதே மண்டபத்தில்தான் பொதுக்குழு நடைபெறுகிறது. எனவே அங்கு இடமில்லை என்று சொல்வது ஏற்புடையதாக இல்லை என்ற தகவலையும் ஆதங்கத்தோடு எங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமல்ல முன்னறிவிப்பு இல்லாமல், ஒற்றைத் தலைமை மற்றும் இரட்டைத் தலைமை குறித்து 14.06.2022 அன்று நடைபெற்ற கூட்டத்தில், சில மாவட்டச் செயலாளர்கள், சில நிர்வாகிகள், கட்சியின் சட்ட விதிகளை உணராமலும், அறியாமலும், தெரியாமலும் கருத்து தெரிவித்துள்ளனர். அத்தகைய கருத்தால், கட்சியின் தொண்டர்கள் கொதித்துப் போயுள்ளனர்.

இது கட்சியின் நிர்வாகிகள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் , பொதுமக்கள் மத்தியிலும் குழப்பமான சூழல் நிலவுகிறது. அத்தகைய கருத்தால், கட்சியில் குழப்பமும், கட்சியின் நற்பெயருக்கு களங்கமும் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து கட்சித் தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்குமாறு ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில் அமைதி காப்பது அவசியம்.

பொதுக்குழுக் கூட்டம் தொடர்பான பொருள் (Agenda) அடங்கிய விவரம் கிடைக்கப் பெறவில்லை என கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், பல மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் முறையிட்டுள்ளனர். கூட்டத்திற்கான பொருள் (Agenda) நிர்ணயம் செய்து கூட்டத்தை நடத்துவது அவசியமாகிறது என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

எனவே, மேற்காணும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன் கருதி, 23.6.2022 அன்று நடைபெறவுள்ள செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தினை தற்போதைக்கு தள்ளிவைக்கலாம் என்றும், அடுத்தக் கூட்டத்திற்கான இடம், நாள் மற்றும் நேரத்தை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய நாம் இருவரும் கலந்தாலோசித்து பின்னர் முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x