Published : 20 Jun 2022 12:54 PM
Last Updated : 20 Jun 2022 12:54 PM
சென்னை: “இன்று அகதிகள் நாள். பொருளாதார நெருக்கடியால் தமிழகம் வந்த ஈழத் தமிழர்களை அகதிகளாக அறிவிக்க வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அடுத்தடுத்த பதிவுகளில், ''உலக அகதிகள் நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. நாடற்றவர்களாக மாறியவர்களின் நலன்களைக் காப்பதற்காகவும், அவர்களின் துணிச்சலைப் போற்றுவதற்காகவும் தான் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், பொருளாதார நெருக்கடியால் தமிழகம் வந்த ஈழத்தமிழர்களின் நிலை?
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 3 மாதங்களில் 90 ஈழத்தமிழர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளனர். ஆனால், அவர்கள் இதுவரை அகதிகளாக அறிவிக்கப்படவில்லை. சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதி அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்த ஈழத்தமிழர்களை அகதிகளாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு கடிதம் எழுதி இரு மாதங்களாகியும் அதன் மீது மத்திய அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அதனால், ஈழத்தமிழர்களுக்கு உதவிகள் வழங்க முடியவில்லை.
இலங்கையிலிருந்து வந்த தமிழர்களின் துயரம் தீர்க்கப்பட வேண்டும். அவர்களை அகதிகளாக அறிவித்து உதவிகளை வழங்க வேண்டும். ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அகதிகளின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT