Last Updated : 20 Jun, 2022 12:36 PM

5  

Published : 20 Jun 2022 12:36 PM
Last Updated : 20 Jun 2022 12:36 PM

பாடத்திட்டத்தில் புராணங்கள், இதிகாசங்கள் இடம்பெறக் கூடாது: பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் தீர்மானம்

விழுப்புரத்தில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநில மாநாட்டில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர்.

விழுப்புரம்: பாடத்திட்டத்தில் புராணங்கள், இதிகாசங்கள் இடம்பெறக்கூடாது என்று விழுப்புரத்தில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நேற்று பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநில மாநாடு நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். பொதுச்செயலர் ஆ.வெங்கடேசன் வரவேற்றார். சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சிமஸ்தான் முன்னிலை வகித்தார்.

உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி மாநாட்டினை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார். கருத்தரங்கை மனோன்மணியம் பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஆ.டி.சபாபதிமோகன் உரையாற்றினார்.

தொடர்ந்து பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் வீ.குமரேசன் தலைமையில் தீர்மான அரங்கம் நடைபெற்றது. தீர்மானங்கள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

இம்மாநாட்டில், இந்திய அரசியல் சட்டத்தின்படி மக்களிடத்தில் அறிவியல் மனப்பான்மை, சீர்திருத்தம், மனிதநேயம் ஆகியவற்றை வளர்க்க வேண்டும், அரசு பணிமனையில் கோயில் கட்டுவது, ஆயுத பூஜை செய்வதை தடை செய்ய வேண்டும், நடைபாதை கோயில்களை அகற்ற வேண்டும், பாடத்திட்டத்தில் புராணங்கள், இதிகாசங்கள் இடம்பெறக்கூடாது, சாதிப் படிவங்களில் எஸ்,சி., எஸ்,டி., ஓபிசி போன்ற அடையாளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்; சாதிப் பெயரை முழுமையாகக் குறிப்பிடக்கூடாது. கைகளில் சாதி வாரியாக வண்ணக் கயிறுகளை கட்ட தடைவிதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பிற்பகல் 4 மணிக்கு விழுப்புரம் மண்ட தி.க.செயலாளர் இளம்பருதி தலைமையில் மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணி நடைபெற்றது.

பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, சிபிஐ கட்சி மாநில செயலர் இரா.முத்தரசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், தி.க.துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், தி.க. பிரச்சார செயலர் வழக்குரைஞர் அருள்மொழி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வே.இரகுநாதன் நன்றி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x