Published : 20 Jun 2022 10:55 AM
Last Updated : 20 Jun 2022 10:55 AM

பொதுத் தேர்வு முடிவுகள் | 10-ம் வகுப்பு 90.07%; 12-ம் வகுப்பு 93.76% தேர்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார். இதில் 10-ம் வகுப்பில் 90.07 சதவீதம் பேரும், 12-ம் வகுப்பில் 93.76 சதவீதம் பேரும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை இன்று (ஜூன் 20) வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: " இன்று அறிவிக்கின்ற இந்த முடிவுகள், யாரெல்லாம் செல்போனில் பதிவு செய்துள்ளார்களோ, அவர்களுக்கு முதலில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும்.பின்னர் பத்தாம் வகுப்பு முடிவுகள் வரும்.

இதுதவிர அந்தந்த பள்ளிகளிலும், இணையதளம் வாயிலாகவும் முடிவுகள் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்வு முடிவைப் பொருத்தவரை வெற்றி தோல்வி மனபான்மை இருக்கக்கூடாது. உயர் கல்வி தொடர்பான சந்தேகங்கள், அச்ச உணர்வு உள்ளிட்டவைகளுக்கு மாணவர்கள் 14417 மற்றும் 1098 என்ற இலவச உதவி எண்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பத்தாம் வகுப்பில் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 12 ஆயிரத்து 62 பேர். இதில் மாணவியரின் எண்ணிக்கை 4 லட்சத்து 32 ஆயிரத்து 439 , மாணவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 60 ஆயிரத்து 120 , மூன்றாம் பாலினத்தவர் ஒருவர். இதில் தேர்ச்சிப் பெற்றவர்கள் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர், கிட்டத்தட்ட 90.07 சதவீதம் பேர் தேர்ச்சிப் பெற்றவர்கள். இதில் மாணவிகள் 4 லட்சத்து 27 ஆயிரத்து 73 பேர், 94.38 சதவீதம். மாணவர்கள் 3 லட்சத்து 94 ஆயிரத்து 920, 85.83 சதவீதம் பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 8.55 சதவீதம் அதிகமாக தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

கடந்த மார்ச் 2019-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்வில், தேர்வெழுதிய மாணாக்கரின் எண்ணிக்கை 9 லட்சத்து 37 ஆயிரத்து 859, இதில் தேர்ச்சிப் பெற்றோர் 8 லட்சத்து 92 ஆயிரத்து 521 தேர்ச்சி விகிதம் 95.2 சதவீதமாக இருக்கிறது.

12-ம் வகுப்பில் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 6 ஆயிரத்து 277 பேர், இதில் மாணவியர் 4 லட்சத்து 21 ஆயிரத்து 622, மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 84 ஆயிரத்து 655. தேர்ச்சிப் பெற்றவர்கள் 7 லட்சத்து 55 ஆயிரத்து 998, கிட்டத்தட்ட 93.76 சதவீதம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இதில் மாணவிகள், 4 லட்சத்து 6 ஆயிரத்து 105 , 96.32 சதவீதம். மாணவர்கள் 3 லட்சத்து 49 ஆயிரத்து 893, 90.96 சதவீதம். மாணவர்களைவிட மாணவிகள் 5.36 சதவீதம் அதிகமாக தேர்ச்சிப் பெற்றுள்ளனர்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x