Published : 20 Jun 2022 08:29 AM
Last Updated : 20 Jun 2022 08:29 AM
சென்னை: தமிழகத்தில், பி.இ., பி.டெக் படிப்புகளுக்கு கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு ஆன்லைனில் இன்று (ஜூன் 20) காலை தொடங்கியது. www.tneaonline.org என்ற இணையதளத்தில் ஜூலை 19ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஜூலை 20 முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். ஜூலை 22ல் ரேண்டம் எண் வெளியிடப்படும். ஆகஸ்ட் 8ல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஆகஸ்ட் 16 முதல் அக்டோபர் 14 வரை ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறும். இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில் பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.
மாணவர்கள் அவர்கள் பயின்ற கல்வி வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். மாவட்டம்தோறும் பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணபிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு: முதன்முறையாக, 10, 12-ம் வகுப்பு களுக்கான தேர்வு முடிவுகள் இன்று ஒரே நாளில் வெளியிடப்படுகிறது. 12-ம் வகுப்புக்கு காலை 9.30 மணிக்கும், 10-ம் வகுப்புக்கு மதியம் 12 மணிக்கும் முடிவுகள் வெளியாகும். சென்னையில் தேர்வுமுடிவுகளை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிடுகிறார்.
இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய வலைதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். இதுதவிர மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய, கிளை நூலகங்கள் மற்றும் தாங்கள் படித்த பள்ளிகளிலும் இலவசமாக தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம். இதுதவிர, மாணவர்களின் கைபேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு முடிவு வெளியாகும் சூழலில் பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT