Published : 20 Jun 2022 08:24 AM
Last Updated : 20 Jun 2022 08:24 AM
தாராப்பூர்: தாராப்பூர் அணுமின் நிலையத்தை சுற்றியிருக்கும் 16 கிராமங்களில் உள்ள இளைஞர்களை தொழில்முனைவோராக்க ‘மேம்பட்ட அறிவு மற்றும் கிராமப்புற தொழில்நுட்ப அமலாக்கம்’ (AKRUTI) என்ற திட்டத்தை இந்திய அணுசக்தி கழகம் கடந்த 3 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற சிறப்பு திட்டம் கூடங்குளத்தில் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்திய அணுசக்தி துறையின் கீழுள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம் நாட்டின் முதன்மையான பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் வளர்ச்சிக்கான மையமாக திகழ்கிறது.
அணுசக்தி துறையில் புதிய தொழில்நுட்பங்களை கண்டறிதல், அணுசக்தி அறிவியல், ரேடியோ ஐசோடோப்புகள், தொழில்துறை, சுகாதாரம், வேளாண்மை போன்றவற்றில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத மற்றும் செலவு குறைந்த திட்டங்களை செயல்படுத்துதல் என, இந்த ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது.
இளைஞர்களுக்கு பயிற்சி
அந்த வகையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உரிய தொழில்நுட்ப பயிற்சிகள் அளித்து, அவர்களை தொழில் முனைவோராக்கும் நடவடிக்கையாக அக்ருதி (AKRUTI) திட்டத்தை மகாராஷ்டிரா மாநிலம்பால்கர் மாவட்டம் பாய்சர் என்ற இடத்தில் கடந்த 3 ஆண்டுகளாக செயல்படுத்த பாபா அணு ஆராய்ச்சி மையம் உறுதுணையாக இருக்கிறது.
ரூ.79 லட்சத்தில் தொடங்கப்பட்ட இதற்கான மையத்தில் சமூக நலன் சார்ந்தும், தொழில்நுட்ப வளர்ச்சிக்காகவும், மருத்துவம், உணவு பதப்படுத்துதல், கழிவுமேலாண்மை மற்றும் ஊரக தொழில் மேம்பாட்டுக்காகவும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வேலையில்லாத இளைஞர்களுக்கு இம்மையத்தில் சிறப்பு பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இங்கு பயிற்சி பெற்ற இளைஞர்கள் பலரும் தொழில் முனைவோராகியுள்ளனர்.
சூரிய வெப்ப உலர்த்திகள்
பழங்கள், காய்கறிகள் மற்றும் மீன்களை உலர்த்தும் வகையில் செலவு குறைந்த, சூரிய வெப்பத்தால் செயல்படுத்தப்படும் உலர்த்திகள் இம்மையத்தில் அமைக்கப்பட்டுள்ளன. செவ்வக அல்லது முக்கோண வடிவிலான இந்த சூரிய வெப்ப உலர்த்திகளின் உள்ளே வெப்பம் 60 டிகிரி செல்சியசாக இருக்கும் பட்சத்தில் வெளிப்புறத்தில் வெப்பம் 30 டிகிரி செல்சியசாக இருக்கும். இந்தஉலர்த்திகள் சுத்தமான, சுகாதாமான சூழலில் மீன்களை உலர்த்துவதற்கு பயன்படும்.
கூடங்குளத்தை சுற்றியுள்ள 13 கடலோர கிராமங்களில் மீன்பிடித் தொழில் பிரதானமாக இருப்பதால் இந்தவகை உலர்த்திகள் கூடங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டால் மீனவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். விற்பனையாகாமல் தேங்கும் மீன்களை குறுகிய காலத்துக்குள் சுகாதாரமான முறையில் உலர்த்தி அதிக வருவாய் ஈட்டலாம் என்று, அக்ருதி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித்சிங் தெரிவித்தார்.
பாகற்காய் சாறு, உடனடி மீன் சூப் தூள், வேப்பிலைகளை உலர்த்தி தயாரிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி, வாழை உள்ளிட்ட தாவரங்களில் திசு வளர்ப்பு போன்றவை குறித்தும்இளைஞர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், கரோனா ஊரடங்கு காலத்தில் முகக்கவசம் தயாரிக்கும் பயிற்சியை கிராமப்புற மக்களுக்கு அளித்து, முகக்கவசம் உற்பத்தியும் நடைபெற்றது.
இளைஞர்களுக்கு வாய்ப்பு
சமூக பொறுப்புணர்வு திட்டத்தின்கீழ் தாராப்பூர் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள 16 கிராமங்களில் தார்சாலை, ஆம்புலன்ஸ் வசதியுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் போன்றவற்றை ஏற்படுத்தியிருப்பதாக இத் திட்டத்துக்கான தலைவர் கேதர் மதுகர் பாவே தெரிவித்தார்.
தாராப்பூர் பகுதியிலுள்ள அக்ருதி மையத்தைப்போல் கூடங்குளத்திலும் அமைக்கஅணுசக்தி கழக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம் கூடங்குளம் பகுதியிலுள்ள இளைஞர்கள் பலரும் தொழில்முனைவோராக உருவாகும் வாய்ப்புகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT