Last Updated : 19 Jun, 2022 06:40 PM

6  

Published : 19 Jun 2022 06:40 PM
Last Updated : 19 Jun 2022 06:40 PM

'ஹெல்த் மிக்ஸ்' குறித்து தவறான தகவல்; நானும் ரவுடி, நானும் ரவுடி என அண்ணாமலை காட்டி வருகிறார்: பால்வளத்துறை அமைச்சர் நாசர்

கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஆவின் உயர்தர பாலகத்தை நேற்று திறந்துவைத்து விற்பனையை தொடங்கிவைத்த பால்வளத்துறை அமைச்சர் மு.நாசர்.

ஹெல்த் மிக்ஸ் தொடர்பாக தவறான குற்றாட்டுகளை முன்வைத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மு.நாசர் தெரிவித்தார்.

கோவையில் மலுமிச்சம்பட்டி, மதுக்கரை ஆகிய இடங்களில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் பால் கொள்முதல் குறித்து அமைச்சர் நாசர் நேற்று ஆய்வு நடத்தினார். தொடர்ந்து, கோவை ஆர்.எஸ்.புரத்தில் உயர்தர ஆவின் பாலகத்தை திறந்துவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த ஆட்சியின்போது ஆவின் நிறுவன காலிப்பணியிடங்களை முறைகேடாக நிரப்ப முயற்சி செய்தனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அதனை முறைப்படுத்தி, தவறுகள் நடக்காத வகையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். ஆவின் தலைவர் பதவி இடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி, திருப்பத்தூரில் புதிய பால் பண்ணையை ஏற்படுத்த உள்ளோம். இதற்கான பணிகள் நடந்து வருகிறது. ஆவின் பாலகத்தில், ஆவின் தயாரிப்புகள் தவிர வேறு உணவுப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது. இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூன்று கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னை, முன்னிலைப்படுத்திக்கொள்ள நானும் ரவுடி, நானும் ரவுடி என்பது போல் கூறி வருகிறார். ஹெல்த் மிக்ஸ் தயாரிப்பதற்கான சாத்தியக்கூறு குறித்த பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் அதை தயாரிக்கவில்லை. ஆய்வின் முடிவுக்கு பிறகு தான் ஹெல்த் மிக்ஸ் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு தயாரிக்காத பொருளை சுகாதாரத்துறை வாங்கியதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை மீது நிச்சயமாக வழக்கு தொடரப்படும். அவர் எப்படி ஐபிஎஸ் ஆனார் என்று தெரியவில்லை. இவ்வாறு அமைச்சர் நாசர் கூறினார்.

இந்த நிகழ்வுகளின்போது கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x