Published : 14 May 2016 05:28 PM
Last Updated : 14 May 2016 05:28 PM

அதிமுகவின் தேர்தல் பணி வீண் உழைப்புதான்: திமுக வேட்பாளர் மு.பெ. சாமிநாதன் பேட்டி

வேட்பாளருக்கு சில கேள்விகள்



''அதிமுகவினர், தேர்தல் வேலை பார்ப்பது வீண் உழைப்பு என்பதை உணர்ந்திருக்கின்றனர். அதிமுகவுக்கு வாக்களிப்பது என்பது நோட்டாவுக்கு வாக்களிப்பது போல" என்கிறார் முன்னாள் அமைச்சர் மு.பெ. சாமிநாதன்.

திருப்பூர் வடக்கு தொகுதியில், திமுக சார்பில் போட்டியிடுகிறார் மு.பெ. சாமிநாதன். கடைசிகட்ட பிரச்சாரத்துக்கு மத்தியில், அவர் தி இந்து (தமிழ்) இணையதளத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டி.

சொந்த தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிபெற்று அமைச்சரானவர் நீங்கள். இப்போது ஏன் திருப்பூர் வடக்கு?

தொகுதி மறு சீரமைப்பு ஒரு காரணம். திருப்பூர் தெற்கு தொகுதியைக் கேட்டிருந்தேன். கட்சித் தலைமை வடக்குத் தொகுதியில் நிற்கச் சொல்லியிருக்கிறது. தலைமைக்கு கட்டுப்பட்டு இங்கு நிற்கிறேன்.

பிரச்சாரம் எப்படிப் போகிறது?

எங்கள் பிரச்சாரத்தில் நாளுக்கு நாள் முன்னேற்றமும், ஆரவாரமும் அதிகமாகி வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் மனம் மற்றும் முகமலர்ச்சியோடு எங்களை வரவேற்கிறார்கள். பெண்கள் ஆரத்தி எடுக்கிறார்கள். ''உங்களுக்குத்தான் வெற்றி; போயிட்டு வாங்க!'' என்று வழியனுப்பி வைக்கிறார்கள். இந்த அளவு வரவேற்பை நாங்களே எதிர்பார்க்கவில்லை.

இப்போதைய ஆட்சி குறித்து மக்கள் என்ன சொல்கிறார்கள்?

குடும்ப அட்டை கூட கொடுக்காத கோபத்தில் இருக்கிறார்கள். ஸ்மார்ட் அட்டை வழங்குவதாகச் சொல்லி, அதிமுக அரசு ஏமாற்றி விட்டதாகச் சொல்கிறார்கள். அனைவரும் குடும்ப அட்டைகளில் இணைப்புத்தாள்களை வைத்து சமாளிக்க வேண்டியதாக இருக்கிறது. விலைவாசி ஏற்றம், பால், மின்சாரக் கட்டண உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். முதலமைச்சருக்கும் அமைச்சருக்கும் தகவல்தொடர்பே இல்லை என்பதை அறிந்திருக்கிறார்கள்.

மற்ற கட்சியினரின் பிரச்சாரத்தைக் கவனிக்கிறீர்களா?

ஆம். அவர்கள் அனைவரும் வேலை பார்க்கிறார்கள். ஆனால் அதிமுகவினர் தேர்தல் வேலை பார்ப்பதை வீண் உழைப்பாகவே கருதுகின்றனர். தேர்தல் முடிவுகள் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அதனால் அமைதியாக இருக்கிறார்கள்.

விவசாயம், பின்னலாடைத் தொழில் சார்ந்த பகுதி இது. அவற்றுக்கு என்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?

முதலில் மக்களுக்கு குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்க வேண்டும். மேட்டுப்பாளையம் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டால் 70 சதவீத தண்ணீர் தேவை நிறைவேற்றப்படும். பின்னலாடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளோம். மக்களுக்குப் பயன்படும் வகையில் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டித்தரப்படும்.

கொங்கு மண்டலத்தில் வணிக ரீதியிலான இடப் பற்றாக்குறை அதிகம் நிலவுகிறது. அறநிலையத் துறையிடம் இருந்துதான் அரசு இடங்களைப் பெற வேண்டியிருக்கிறது. அவற்றில் நிறைய இடங்கள் மீதான வழக்குகள் உள்ளன. அதைச் சரிசெய்ய வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து வந்து தங்கி வேலை பார்க்கும் ஆண், பெண் தொழிலாளர்களுக்கு தனித்தனி விடுதிகள் கட்டித்தர உள்ளோம். போக்குவரத்து நெரிசலைப் போக்கும் வகையில் சாலை மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம்.

அமைச்சர் அனுபவம் இந்த தேர்தலில் கைகொடுக்குமா?

கண்டிப்பாகக் கொடுத்திருக்கிறது. முந்தைய ஆட்சிக் காலத்தில்தான் திருப்பூர் மாவட்டத்தை தனி மாவட்டமாக ஆக்கும் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. அப்போது நிறைய சாலைகளை அகலப்படுத்தினோம். நான்கு பாலங்களைக் கட்டினோம். அதை மக்கள் இன்னும் நினைத்துப் பார்க்கிறார்கள்.

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

திமுக தேர்தல் அறிக்கைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. திருப்பூர் வடக்கில் திமுகவுக்கு உறுதியான வெற்றி உண்டு. நாங்களே எதிர்பார்க்காத பெரிய மாற்றம் இது. அதிமுகவினர் பணத்தைக் கொடுத்து மக்களைக் கவிழ்க்கப் பார்க்கிறார்கள். என்ன செய்தாலும் மக்கள் நினைப்பதைத்தான் செய்வார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x