Published : 19 Jun 2022 11:39 AM
Last Updated : 19 Jun 2022 11:39 AM

கரோனா அறிகுறி உள்ளவர்களின் விவரங்களை அளிக்க வேண்டும்: தனியார் மையங்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் கரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்கள் குறித்த விவரங்களையும், வீடுகளில் தனிமைபடுத்திகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ள நபர்கள் குறித்த விவரங்களையும் மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என ஆணையர் கன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் கடந்த ஒரு சில நாட்களாக கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் 94 என்ற நிலையில் இருந்த கோவிட் தொற்று 250 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் பொது சுகாதாரத்துறையின் நெறிமுறைகளின்படி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல், சளி, மற்றும் இருமல் போன்ற கோவிட் தொற்று அறிகுறியுள்ள நபர்கள் குறித்த விவரங்களையும், வீடுகளில் தனிமைபடுத்திகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ள நபர்கள் குறித்த விவரங்களையும் மாநகர நல அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகள் அல்லாமல் தனியார் சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களிடம் கரோனா தொற்று அறிகுறியுள்ள நபர்கள் சிகிச்சை பெறுவதாகவும், அதுகுறித்த தகவல்கள் மாநகராட்சியின் கவனத்திற்கு வருவராமல் இருந்து காரணத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே கரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்கள் அல்லது கரோனா தொற்று உள்ளவராக சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் தனிமைபடுத்திகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ள நபர்கள் குறித்த விவரங்களை நாள்தோறும் பெயர், முகவரி, கைபேசி எண், அறிகுறி மற்றும் தனிமைபடுத்திகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ள நபர்களின் பெயர், முகவரி, கைபேசி எண், கோவிட் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட நாள், மருத்துவமனை பெயர் மற்றும் முகவரி, வீட்டில் தனிமைபடுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்ட நாள் ஆகிய தகவல்களை gccpvthospitalreports@chennaicorporation.gov.in, gccpvthospitalreports@chennaicorporation.gov.in, என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

தகவல் தெரிவிக்க தவறினால் தமிழ்நாடு பொதுசுகாதார சட்டம் 1939 மற்றும் சென்னை நகர முனிசிபல் கார்ப்பரேசன் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x