Published : 19 Jun 2022 08:00 AM
Last Updated : 19 Jun 2022 08:00 AM
சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 60 வயதுக்கு மேற்பட்ட சென்னைவாழ் மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி இம்மாதம் வரை பயணம் செய்வதற்கான டோக்கன்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.
அடுத்த அரையாண்டுக்கு ஒரு மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் மற்றும் பயண அட்டைகள், வரும் 21-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை, திருவொற்றியூர், பெரம்பூர், ஆவடி, வடபழனி, அடையாறு உள்ளிட்ட 40 பேருந்து நிலையங்களில் காலை 8 முதல் இரவு 7.30 மணி வரை வழங்கப்படும்.
புதிதாக கட்டணமில்லா பயண அடையாள அட்டை மற்றும் டோக்கன்களைப் பெறுவதற்கு இருப்பிடச் சான்றாக குடும்ப அட்டை நகல், வயது சான்று (ஆதார் அட்டை,ஓட்டுநர் உரிமம், கல்விச் சான்று, வாக்காளர் அட்டையில் ஏதேனும் ஒன்று) நகல், 2 வண்ண பாஸ்போர்ட் புகைப்படங்களை, அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்களைச் சரிபார்க்கும் வகையில் அசலையும் கையில் வைத்திருக்க வேண்டும்.
புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள், தங்களது முந்தைய கட்டணமில்லா பயண அட்டையை மட்டும் கொண்டு வந்தால் போதுமானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT