Published : 19 Jun 2022 10:43 AM
Last Updated : 19 Jun 2022 10:43 AM
கரூர்: பிறந்த நாளை பள்ளி வகுப்பறையில் கேக் வெட்டி கொண்டாடிய ஆசிரியர், அவருக்கு கேக் ஊட்டிவிட்ட பெண் தலைமை ஆசிரியை இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ளது பங்களாபுதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. இப்பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரியர் க.மணிகண்டன் (49). இவருக்கு கடந்த 16ம் தேதி பிறந்த நாள். இதனையொட்டி அன்றைய தினம் பள்ளி வகுப்பறையில் தலைமை ஆசிரியர் சித்ராதேவி (59). சக ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் முன்னிலையில் மணிகண்டன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார், இந்நிகழ்வின்போது ஆசிரியர் மணிகண்டனுக்கு தலைமை ஆசிரியை சித்ராதேவி கேக் ஊட்டி விட்டார்.
இந்த புகைப்படங்களை மணிகண்டன் அவரது வாட்ஸ்அப் ஸ்டேட்ஸில் வைத்துள்ளார். இப்புகைப்படங்கள் அனைத்து ஆசிரியர் குழுக்களிலும் பகிரப்பட்டு வந்தது. மேலும் 1 கிலோ கேக் வெட்டப்பட்ட நிலையில் மாணவ, மாணவிகளுக்கு கேக் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும், பள்ளி வளாகங்களில் மாணவர்களால் பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளராகவும் மணிகண்டன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஆசிரியர் மணிகண்டனிடம் பேசியபோது, பிறந்த நாளையொட்டி பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கிய நிலையில் மாணவ, மாணவிகளின் வேண்டுகோளுக்காக கேக் வெட்டியதாகவும், இப்புகைப்படங்களை தனது வாட்ஸ்அப் ஸ்டேட்ஸில் வைத்த நிலையில் சிலர் அதனை சர்ச்சையாக்கி வருவதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜ.ஜெயராஜ் வெளியிட்டிருந்த அறிக்கையில், மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டிய ஆசிரியர்களே இப்படி நடந்து கொள்வது மாணவர் மத்தியில் ஆசிரியர்களுக்கு அவப்பெயரும், பல்வேறு விமரிசனங்களையும் ஏற்படுத்தும். இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குளித்தலை மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன், தலைமை ஆசிரியை சித்ராதேவி, ஆசிரியர் மணிகண்டன் ஆகிய இருவரையும் நேற்று (ஜூன் 18ம் தேதி) சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமாரிடம் பேசியபோது, ”பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் முன்பு கேக் வெட்டியுள்ளனர். அதனை இருவரும் ஊட்டிவிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT