Last Updated : 18 Jun, 2022 07:51 AM

1  

Published : 18 Jun 2022 07:51 AM
Last Updated : 18 Jun 2022 07:51 AM

கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் சேமிப்பு மையம் அமைவதால் பாதிப்பா? - அறிவியல் தொழில்நுட்ப முன்னாள் இயக்குநர் விளக்கம்

தாராப்பூர்: கூடங்குளத்தில் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் சேமிப்பு மையம் அமைவதால் பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்த கேள்விக்கு, கேரள மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகங்கள், கோளரங்கங்கள் துறை முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி ஜி.அருள் ஜெரால்டு பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் தாராப்பூரில் அணுஉலைக்கு அப்பால் (ஏஎப்ஆர்) அமைந்துள்ள பயன்படுத்தப்பட்ட எரிபொருள் சேமிப்புமையத்தை பார்வையிட, கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் சார்பில் வந்துள்ள குழுவில் அருள்ஜெரால்டு பிரகாஷ் இடம்பெற்றுள்ளார். கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் ரூ.2.56 கோடி செலவில் அணுசக்தி தகவல் மையத்தை இவர் தலைமையிலான குழு வடிவமைத்து நிர்மாணித்தது. அவர் கூறியதாவது: கூடங்குளத்தில் மின்உற்பத்தி நடைபெறும் முதல் இரு அணுஉலைகளிலும் பயன்படுத்திய எரிபொருள்கள் அணுஉலை வளாகத்திலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. தற்போது அணுஉலைக்கு அப்பால் என்ற திட்டத்தில், அணுஉலை வளாகத்திலேயே அவற்றை இருப்பு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக வெளிப்புறத்தில் 2 அடுக்கு சுவரும், உள்ளேமெட்டல் சுவரும் அமைக்கப்படும். அதனுள் நீர்நிரம்பிய குளத்தில் இந்த எரிபொருள்கள் வைக்கப்படும். இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு என்பதால் யாரும் பயப்படத் தேவையில்லை.

இந்த விவகாரத்தில் தேவைஇல்லாமல் மக்கள் மத்தியில் சிலர்பயத்தை உருவாக்கி வருகிறார்கள். விஞ்ஞானிகள் கூறுவது அத்தனையும் பொய் என்ற கருத்து உருவாக்கப்படுகிறது. அந்தந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

கூடங்குளம் பகுதியில் கதிரியக்கம் கூடியிருக்கிறதா, இல்லையா என்பதை விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்து, பொதுவெளியில் தெரிவிக்கும் நடவடிக்கையை, சுற்றுவட்டார பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் அரசு மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் அணுஉலை தொடர்பான தவறான புரிதல்களுக்கு சரியான விளக்கங்கள் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய அணுமின் திட்டங்கள்

நாட்டின் எதிர்கால மின்தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய அணுமின் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசுமுன்வந்துள்ளது. தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கட்டுமானப் பணி நடைபெறும் அணுமின் நிலையங்கள் விவரம் வருமாறு: மகாராஷ்டிராவில் தலா 1650 மெகாவாட் மின்உற்பத்தி திறனில் 6 அணுஉலைகள் அமைகின்றன. தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறனுள்ள அணுஉலைகள் கூடங்குளத்தில் 4, மேற்குவங்கம் ஹரிப்பூரில் 6, குஜராத் மித்திவிர்த்தியில் 6, ஆந்திர பிரதேசம் கோவாடாவில் 6 வீதம் அமைகின்றன.

தலா 700 மெகாவாட் மின்உற்பத்தி திறனுள்ள அணுஉலைகள் ராஜஸ்தான் ராவத்பாட்டாவில் 2, குஜராத் கக்ராபார் பகுதியில் 2, ஹரியானா கோரக்பூரில் 2, மத்திய பிரதேசம் பீம்பூரில் 4, ராஜஸ்தான் மகிபன்ஸ்வாராவில் 4, மத்திய பிரதேசம் சுட்காவில் 2, கர்நாடகா கைகாவில் 2 வீதம் அமைகின்றன.

தமிழகத்தில் கல்பாக்கம் அருகே பாவினியில் 500 மெகாவாட் மின்உற்பத்தி திறனுள்ள ஒரு அணுஉலை அமைகிறது. இவற்றில் பயன்படுத்தப்படும் எரிபொருள் சேமிப்புக்கான கட்டமைப்புகள் அந்தந்த வளாகத்திலேயே உருவாக்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x