Published : 09 May 2016 09:14 AM
Last Updated : 09 May 2016 09:14 AM

இன்று சூரியன் நெற்றியில் பொட்டு!

இன்று மாலையில் சூரியன் மேற்கே சாயத்தொடங்கும் போது அதன்நெற்றியில் கரும் பொட்டு இருக்கும். அதிசய மான இந்த வானியல் அற்புதத்தை நம்மால் பார்க்கமுடியும். பத் தாண்டுகளுக்கு பிறகு நடைபெறு கிற இந்த ‘புதன் இடைமறிப்பு’ தமிழகம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் மக்களின் பார்வைக் குத் தென்படும்.

நமது பூமியும் புதன் கிரகமும் சூரியனும் ஒரே நேர்கோட்டில் நிலை கொள்ளும்போது இந்த புதன் இடைமறிப்பு நிகழ்வு ஏற்படும்.அமாவாசையின்போது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலா வந்து நிலைகொள்ளும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அது போல இடையே புதன் வரும் போது அதனால் மறைப்பு ஏற்பட்டு சூரியனின் முகத்தில் கரும்புள்ளி போல தென்படும்.

புதன் எனும் தூசு

பூமிக்கு வெகு அருகில் நிலவு உள்ளது. எனவே, நமது பார் வைக்கு பெரிதாக தென்படும் நில வால் சூரியனை மறைக்க முடியும். அதனால்தான் அத்தகைய கிரக ணங்களை நாம் காண்கிறோம். ஆனால் பூமியிலிருந்து சுமார் 7.7கோடி கிலோமீட்டர் தொலை வில் உள்ள புதன் நம்முடைய கண்களுக்கு ஒரு தூசுதான். எனவே சூரியனை கணிசமாக புதனால் மறைக்க முடியாது.

இதுவரை வரலாற்றில் முதன் முறையாக ஆராயப்பட்ட புதன் இடைமறிப்பு 1631 நவம்பர் 7-ல் நடந்தது. அதற்கு பல ஆண்டுக ளுக்கு முன்பாகவே இந்த இடை மறைப்பை ஜெர்மனியின் கெப்ளர் (1571- 1630) கணித்து கூறியிருந் தார். அதனை முதன் முறையாக பிரான்ஸ் நாட்டின் பியரி கசாண்டி (1592- 1655) தொலைநோக்கியின் உதவியுடன் கண்டு ஆராய்ச்சி செய்தார். இரண்டாவது முறையாக ஆராயப்பட்ட புதன்இடைமறைப்பு 1651 நவம்பர் 3-ல் நிகழ்ந்தது. அந்த இடைமறைப்பை சூரத் நகருக்கு வருகை புரிந்த வானவியலாளர் ஜெர்மி ஷாகர்லி என்பவர் இந்திய மண்ணிலிருந்து கண்டார். அவர் கணித்திருந்த பஞ்சாங்கம் துல்லிய மானது என்பதை நிறுவ இந்த வான் நோக்கல் ஆய்வை அவர் மேற்கொண்டார்.

ஏன் இடைமறிப்பு?

இந்திய பாரம்பரிய வானியல் முதற்கொண்டு பல வானியல் சித்தாந்தங்களின் அடிப்படையில் இதுபோன்ற இடைமறிப்பை கற்பனை செய்து கணிக்க முடியும் என்றாலும் வெறும் கண்களுக்கு எளிதில் புலப்படாத இந்த நிகழ்வை தொலைநோக்கியின் பயன் வருவதற்கு முன்னர் யாரும் பார்த்திருப்பதற்கான சாத்தியங் கள் குறைவு.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே அவ்வப்போது புதன் வந்து சென்றாலும் அப்போதெல் லாம் இடை மறைப்பு நிகழ்வது இல்லை. பூமியின் சுற்றுப்பாதை யிலிருந்து புதனின் பாதை சுமார் ஏழு டிகிரி சாய்ந்து உள்ளது.எனவே இடையே வரும் காலங் களில் சூரியனுக்கு சற்று மேலாக அல்லது தாழ்வாக கடந்து விடும். புதனின் பாதை பூமியின் பாதை யில் சந்திக்கும் இரண்டு சந்திப்பு புள்ளிகளுக்கு நேராக பூமி ஆண்டுதோறும் மே 8-9 மற்றும் நவம்பர் 14-15 ஆகிய தேதிகளில் நிலை கொள்ளும். இதே சந்திப்பு புள்ளியில் புதனும் வந்து சேரும் நேரத்தில் மட்டுமே புதன் இடைமறைப்பு ஏற்படுகிறது.

எப்போது இடைமறைப்பு?

இந்திய நேரப்படி 2016 மே 9 மாலை 4:30-க்கு இடைமறைப்பு நடைபெறத் தொடங்கும். சரியாக 4:32 மணிக்கு முதல் சந்திப்பு நிகழும். அதன் பின்னர் மெல்ல மெல்ல புதன் கோள் ஒரு கருப்புப் புள்ளியாக சூரியனின் முகத்தில் நகர்வதை நாம் தெளிவாக காண லாம். சரியாக இரவு 8:27 மணிக்கு இடை மறைப்பு அதன் நடுப்புள் ளியை அடையும். அதற்கு முன்னரே இந்தியாவில் சூரியன் அஸ்தமித்து விடும் என்பதால் அதைப் பார்க்க முடியாது. எனவே, புதன் இடை மறைப்பைக் காண சரியான தருணம் மாலை சுமார் 17:30 மணி.

இந்தியாவில் மாலையில் தென்படும் இந்த இடைமறைப்பு ஐரோப்பாவிலும் ஆப்ரிக்காவிலும் நண்பகலில் தென்படும்.

இதனைக் காண சூரியக் கண்ணாடிகள் முதலியவற்றை பயன்படுத்தலாம். எனினும், மிக நுண்ணிய அளவில் மட்டுமே புதன் தென்படும் என்பதால் அதன் உருவை பெரிதாக்கி காண்பதுதான் நல்லது. எனவே, சிறு தொலைநோக்கி முதற்கொண்டு பல்வேறு வகை யான உருப்பெருக்கு கருவிகளை பயன்படுத்தலாம். சூரியனை நேரடியாக தொலை நோக்கியால் பார்க்கக்கூடாது. எனவே, தொலைநோக்கி முதலி யவை கொண்டு சூரியனின் பிம் பத்தை ஏற்படச்செய்து அதனை காணவேண்டும். கிரகங்களின் வேகம், அதன் அளவு உள்ளிட்ட வற்றை அளவிடுவது முதற் கொண்டு பூமிக்கும் சூரியனுக் கும் இடையே உள்ள தொலை வைக்கூட இடைமறைப்பு நிகழ்வு களை கொண்டு மதிப்பிடலாம்.

கிரகங்கள் பற்றிய ஆய்வுக்கு பலவகைகளில் பயன்படும் இந்த அற்புத காட்சியை பாதுகாப்பாக காண்பதற்கு இந்தியா முழுவதும் வானியல் ஆர்வலர்கள் தொலை நோக்கி ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். bit.ly/tom-india, http://astron-soc.in/outreach/activities/sky-event-related/transit-of-mercury-2016/, nehruplanetarium.org ஆகிய வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கட்டுரையாளர் மத்திய அரசின் விக்யான் பிரச்சார மையத்தின் விஞ்ஞானி
தொடர்புக்கு: tvv123@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x