Published : 17 Jun 2022 07:07 PM
Last Updated : 17 Jun 2022 07:07 PM
சென்னை: 'தோழா' திரைப்படம் வெளியானபோது, போஸ்டர் ஒட்டியவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்திய விவகாரத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ள மாநில மனித உரிமை ஆணையம், அந்த தொகையை சம்பந்தப்பட்ட காவலர்களிடமிருந்து வசூலித்துக்கொள்ள வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் கவாஸ்கர் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2016-ம் ஆண்டு நடிகர் கார்த்தி நடித்த தோழா படம் வெளியானது. அப்போது, எனது சகோதரர்கள் வெங்கடேஷ் (தூத்துக்குடி மாவட்ட கார்த்தி ரசிகர் மன்ற தலைவர்), வெங்கடகொடி, சீனிவாஸ் ஆகியோர் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பகுதிகளில் போஸ்டர் ஒட்டினர்.
அப்போது அவ்வழியாக வந்த தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் திரவிய ரத்தினராஜ் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க அவர்கள் மறுத்ததால் பழைய பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார், மத்திய பாகம் காவல் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் ஆகியோர் எனது சகோதரரர்களின் ஆடைகளை களைந்து ஆபாசமாக திட்டி கடுமையாக தாக்கினர். இதில், அவர்கள் காயம் அடைந்தனர். எனவே, எனது சகோதரர்கள் தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன், புகார் குறித்த சாட்சியம் மற்றும் ஆவணங்களை பார்க்கும்போது ஆய்வாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தெரிகிறது. எனவே, பாதிக்கப்பட்ட வெங்கடகொடிக்கு ரூ.5 லட்சமும், வெங்கடேஷ் மற்றும் சீனிவாஸ் ஆகியோருக்கு தலா ரூ. 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும்.
இந்த தொகையை ஆய்வாளர் சுரேஷ்குமார், உதவி ஆய்வாளர் ரவிக்குமார், காவலர் திரவியரத்தினராஜ் ஆகியோரிடம் இருந்து தலா ரூ.2 லட்சம் வீதம் வசூலித்துக்கொள்ளலாம். மேலும், அவர்கள் 3 பேர் மீதும் குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT