Published : 17 Jun 2022 04:36 PM
Last Updated : 17 Jun 2022 04:36 PM
மதுரை: மதுரை அரசு விரைவு போக்குவரத்துக் கழக இலவச கண் மருத்துவ முகாமில் பாஜக மாவட்ட தலைவர் பங்கேற்றதால், கிளை மேலாளரை பணியிடை நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
மதுரை அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் பணியாளர்களுக்கான கண் பரிசோதனை மற்றும் கண்ணாடி வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவரும், மருத்துவருமான பி.சரவணன் பங்கேற்றார்.
அரசு விரைவு போக்குவரத்து கழக நிகழ்ச்சிக்கு பாஜக நிர்வாகியை சிறப்பு விருந்தினராக அழைத்த கிளை மேலாளர் அபிமன்யு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரசுக்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் புகார் அனுப்பியது. இதையடுத்து அபிமன்யு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக் கோரி அபிமன்யு, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதில், ‘அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் மார்னிங் ஸ்டார் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் இந்தியன் மிஷன் இன்ஸ்டியூட் சார்பில் பணியாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் முக கண்ணாடி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த அறக்கட்டளைகளின் உறுப்பினர் என்ற முறையில் மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் சரவணன் நிகழ்வில் பங்கேற்றார். அவரது வருகையின்போது அவர் சார்ந்த கட்சி கொடிகள், விளம்பரங்கள் செய்யப்படவில்லை. இதனால் என்னை பணியிடை நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, மனுதாரரை பணியிடை நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT