Published : 17 Jun 2022 11:57 AM
Last Updated : 17 Jun 2022 11:57 AM

மதுரையில் உள்ள 85 நூலகங்களுக்கு போட்டித் தேர்வுக்கான 13 ஆயிரம் நூல்கள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், மதுரை மாவட்டத்தில் உள்ள 85 நூலகங்களுக்கு போட்டித் தேர்வுக்கான 13 ஆயிரம் நூல்கள் மற்றும் நூலடுக்குகளை தமிழக முதல்வர மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 17) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மதுரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், மதுரை மாவட்டத்தில் உள்ள 85 நூலகங்களுக்கு போட்டித் தேர்வுக்கான ரூ.30 லட்சம் மதிப்பிலான 13 ஆயிரம் நூல்கள் மற்றும் நூலடுக்குகளை வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்து, மதுரை நூலகத்தை சேர்ந்த நூலகர்களுக்கு அந்நூல்களை வழங்கினார்.

போட்டித் தேர்வுகளுக்காக நகர்ப்புற பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்பு கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், கிராமப்புற மாணவர்களும் போட்டித் தேர்வுகளுக்கு படிப்பதற்கான வசதியினை ஏற்படுத்தி தரும் நோக்கத்துடன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பெறப்பட்ட போட்டித் தேர்வுகளுக்கான 164 நூல்கள் கொண்ட தொகுப்பினை, மதுரை மாவட்டத்தில் உள்ள மாவட்ட மைய நூலகம், முழு நேர நூலகங்கள், ஊர்புற நூலகங்கள் மற்றும் கிளை நூலகங்கள் ஆகிய 85 நூலகங்களுக்கு தமிழக முதல்வர் வழங்கினார். மேலும், அனைத்து நூலகங்களுக்கும் இரும்பு புத்தக அடுக்குகளையும் வழங்கினார். இப்புத்தக தொகுப்புகளில் மொத்தம் 13,000 புத்தகங்கள் அடங்கும்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பொது நூலக இயக்குநர் (பொறுப்பு) க.இளம்பகவத், மதுரையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.வெங்கடேசன், எம்.பூமிநாதன், துணை மேயர் டி.நாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.அனீஷ் சேகர், மதுரை மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், நூலகர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x