Published : 17 Jun 2022 11:16 AM
Last Updated : 17 Jun 2022 11:16 AM

வெள்ளத்தில் முழ்கிய தி.நகர் | கைவிடப்பட்டது மாம்பலம் கால்வாய் சீரமைப்பு திட்டம்: சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை: திருப்புகழ் கமிட்டி பரிந்துரை படி மாம்பலம் கால்வாய் சீரமைப்பு திட்டத்தை கைவிட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையில் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் உள்ளிட்டவைகள் முக்கிய கால்வாய்கள் ஆக உள்ளன. இவற்றுடன் 52 துணை கால்வாய்கள் இணைகின்றன. இதில் மாம்பலத்தில் தொடங்கி தி.நகர், நந்தனம் வழியாக அடையாற்றுடன் இணையும் துணை கால்வாய் ‘மாம்பலம் கால்வாய்’ என அழைக்கப்படுகிறது. 5.6 கிமீ நீளமுள்ள இந்த கால்வாயை சீரமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்து கடந்த ஆட்சியில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது.

இதன்படி மாம்பலம் கால்வாய் மற்றும் ரெட்டிகுப்பம் கால்வாயில் இருக்கும் கழிவுகள் அகற்றப்பட்டு, கழிவுநீர் விடப்படும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு, குடிநீர் வாரிய கழிவுநீரேற்று நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டது. மேலும் அந்த கால்வாயின் கரையோரங்களில் இரு புறமும் 6 கி.மீ. நீளத்துக்கு பசுமை பூங்காக்கள், நடைபாதைகள், சைக்கிள் பாதை ஆகியவை அமைக்கப்பட முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து டெண்டர் கோரப்பட்டு பணிகளை தொடங்க 6 ஒப்பந்ததாரர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது. குறிப்பாக தி.நகர் பகுதிகளில் பல இடங்களில் தண்ணீர் பல நாட்கள் தேங்கி இருந்தது. இது தொடர்பாக தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது, தி. நகர், ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறக்கூடிய தண்ணீர் மாம்பலம் கால்வாய் வழியாக தான் வெளியேற வேண்டும். இந்த கால்வாயை சீரமைக்க கடந்த ஆட்சியின் போது 6 ஒப்பந்ததாரர்களிடம் ஒப்பந்தம் ஒப்படைக்கப்பட்டபோதும் அவர்கள் கால்வாய் சீரமைப்புப் பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சீரமைப்புப் பணிகளின் போது சேர்ந்த கட்டிடக் கழிவுகளை ஆங்காங்கே கொட்டிவிட்டு சென்றதால், கால்வாய் நீர்வழித்ததடம் அடைத்துக் கொண்டதாகவும், இதன் காரணமாக தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் வெள்ளம் ஏற்பட்டதாக தெரியவந்தது.

இந்நிலையில் கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மாம்பாலம் கல்வாய் சீரமைப்புப் பணிகளை கைவிட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை வெள்ள பாதிப்பு சரி செய்ய அமைக்கப்பட்ட திருப்புகழ் கமிட்டி பரிந்துரையின்படி இந்த முடிவை சென்னை மாநகராட்சி எடுத்துள்ளது.

மேலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளை மறு சீரமைப்பு செய்யும் ஹைட்ராலிக் வெள்ள மாதிரி (hydraulic flood modelling ) முறையில் புதிய திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மாம்பலம் கால்வாய் சீரமைப்புப் பணிகள் மீண்டும் மேற்கொள்ள சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

தற்போது மாம்பலம் கால்வாயில் எந்த வித மாற்றமும் செய்யாமல் தண்ணீர் தடையின்றி செல்ல தேவையான பணிகளை மட்டும் மேற்கொள்ள சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x