Published : 17 Jun 2022 08:41 AM
Last Updated : 17 Jun 2022 08:41 AM

தமிழகத்தில் கரோனாவுக்கு பிறகு புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு: சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் சரவணன் தகவல்

து.விஜயராஜ்

சென்னை: நாடு முழுவதும் தொற்றா நோய்களால் 63 சதவீதம் பேர் உயிரிழக்கின்றனர். இதில் அதிகபட்சமாக 9 சதவீதம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது கரோனா பெருந்தொற்றுக்கு பிறகு தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலான குழந்தைகள் ரத்தப்புற்றுநோயால் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கடந்த 2018-ம் ஆண்டு 90 குழந்தைகளும், 2019-ல் 100 குழந்தைகளும், 2020-ல் 115 குழந்தைகளும், 2021-ல் 140 குழந்தைகளும் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நடப்பு ஆண்டு ஜூன் மாதம் வரையில் மட்டும் அதிகபட்சமாக 157 குழந்தைகள் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுள்ளனர். குறிப்பாக இவர்களில் 1-10 வயது குழந்தைகள் அனைவரும் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். இதேபோல புற்றுநோயால் பாதிக்கப்படும் பெரியவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

0.1 சதவீதம் அதிகரிப்பு

தமிழகத்தில் கடந்த 2017 முதல் ஒவ்வோர் ஆண்டும் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 0.1 சதவீதம் அதிகரித்து வருவதாகவும், தற்போதையை சூழலில் மருத்துவமனைகளில் புற்றுநோய் பரிசோதனையை அதிகப்படுத்தி இருப்பதால், கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டில் புற்றுநோய் பாதிப்பு உயர வாய்ப்பு உள்ளது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு புற்றுநோய் சிகிச்சைக்கு வரும் 100 பேரில் மார்பகப் புற்றுநோய் பாதிப்பு 26 சதவீதத்துக்கும் அதிகமாகவும், காது மற்றும் கழுத்து பகுதிகளில்வரும் புற்றுநோய் 20-25 சதவீதமாகவும், கர்ப்பப்பை மற்றும் நுரையீரல் புற்றுநோய்தலா 10-15 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை புற்றுநோயியல் துறை தலைவர் டாக்டர் சரவணன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

கரோனாவுக்கு பிறகு புற்றுநோய்க்காக சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கரோனா காலத்தில் காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும்போது உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தியதே இதற்கு காரணம்.

பரிசோதனை அவசியம்

அறிகுறிகளுடன் வருபவர்களை பரிசோதிக்கும்போது அவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பும் கண்டறியப்படுகிறது. தற்போது புற்றுநோய் பரிசோதனை அதிகஅளவில் செய்யப்படுவதால் மட்டுமே எண்ணிக்கை உயர்ந்து காணப்படுகிறது. பொதுமக்கள் ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய் பரிசோதனை செய்து கொண்டு அதை கண்டறிந்தால், முதல் நிலையிலேயே குணப்படுத்திவிட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x