Published : 17 Jun 2022 07:51 AM
Last Updated : 17 Jun 2022 07:51 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அணுஉலைக்கு அப்பால்(AFR - Away From Reactor) பயன்படுத்தப்பட்ட எரிபொருள் சேமிப்பு மையத்தை உயர்தர பாதுகாப்பு அம்சங்களுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை அணுமின் நிலைய நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
அணுஉலைகளில் பயன்படுத்திய எரிபொருள் 2 கட்டங்களாக சேமித்து வைக்கப்படுகிறது. முதற்கட்டமாக அணுஉலைக்கு உள்ளேயே அமைந்துள்ள பயன்படுத்திய எரிபொருள் சேமிப்பு கிடங்கில்வைக்கப்படுகிறது.
2-ம் கட்டமாக அணுஉலைக்கு அப்பால் அமையும் சேமிப்பு மையத்தில் பாதுகாக்கப்படுகிறது. இந்த பயன்படுத்தப்பட்ட எரிபொருள் சேமிப்பு மையம், அணுமின் நிலைய ஆரம்ப காலங்களில் கட்டப்படுவதில்லை. தேவைப்படும்போது அமைக்கப்படுகிறது.
தற்போது இந்தியாவில் மகாராஷ்டிராவில் உள்ள தாராபூர் அணுமின் நிலையத்தில் 2சேமிப்பு மையங்களும், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராவத்பாட்டாவில் ஒன்றும் செயல்பாட்டில் உள்ளன. ராஜஸ்தானில் மேலும் ஒரு மையம் அமையவுள்ளது.
இதுபோல் கூடங்குளத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறனுள்ள 2 அணுஉலைகளிலும் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை சேமித்து வைக்க, அணுஉலைக்கு அப்பால் உயர்தர பாதுகாப்பு அம்சங்களுடன் சேமிப்புகிடங்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அணுமின் நிலைய வட்டாரங்கள் கூறும்போது, கூடங்குளம் அணுஉலைகளில் பயன்படுத்தப்படும் எரிபொருள் தொகுப்புகளின் வகைக்கு ஏற்பமட்டுமே இந்த ஏஎப்ஆர் வடிவமைக்கப்படும். மற்ற அணுஉலைகளில் பயன்படுத்தப்படும் எரிபொருள் வேறுவகையை சேர்ந்ததால், அவற்றை கூடங்குளத்தில் அமையஉள்ள சேமிப்பு கிடங்கில் சேமிக்க முடியாது.
அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி கட்டப்படவிருக்கும் இந்தசேமிப்பு கிடங்கு, உயர்தர பாதுகாப்பு மதிப்பீட்டுக்கு ஏற்ப வடிவமைக்கப்படும். சுனாமி, பூகம்பம்போன்றவற்றை தாங்கும் வகையில் உயர்ந்த தரம் கொண்டதாகஇருக்கும். இதனால், ஊழியர்களுக்கோ, பொதுமக்களுக்கோ, சுற்றுச்சூழலுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது. தாராபூர், ராஜஸ்தான் அணுமின் நிலையங்களில் செயல்பாட்டிலுள்ள பயன்படுத்தப்பட்ட எரிபொருள் சேமிப்பு மையங்களே இதற்கு சான்றாகும்.
கழிவு அல்ல
பொதுவாக டிஜிஆர் எனப்படும் ஆழமான சேமிப்பு கிடங்குகள், அதிகளவில் கதிரியக்கம் கொண்டகழிவுகளை சேமித்து வைக்க பயன்படுகிறது. ஆனால் அணுஉலைகளில் பயன்படுத்தப்பட்ட எரிபொருள், கழிவு அல்ல.
பயன்படுத்தப்பட்ட எரிபொருள்சேமிப்பு மையம், அணுஉலைக்குஅப்பால் என்று அழைக்கப்பட்டாலும், இது நிலைய வளாகத்துக்குள்ளேயே அமைக்கப்படுகிறது. பாதுகாப்பு காரணத்துக்காகவும், இயக்க தேவைக்காகவும் இவ்வாறு அமைக்கப்படுகிறது.
அணுமின் நிலைய வடிவமைப்பின்போது இதற்கென இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. பொதுமக்களிடையே இதுபற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை அணுமின் நிலைய நிர்வாகம் மேற்கொண்டிருக்கிறது. இத்தகவலை, கூடங்குளம் அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் கோட்போலே கூறியதாவது: பயன்படுத்தப்பட்ட எரிபொருள் சேமிப்பு மையத்தை அமைக்க மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த சேமிப்பு மையம் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாது. கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக சுற்றியுள்ள கிராமங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். அணுமின் நிலையம் அமைய இடம் அளித்தவர்களுக்கு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். ஒப்பந்த தொழிலாளர்களில் 95 சதவீதம்பேர் இப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தார்.
முதல் மற்றும் 2-வது அணுஉலைகளின் நிலைய இயக்குநர் ஆர்.எஸ். சாவந்த் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT