Published : 21 May 2016 03:17 PM
Last Updated : 21 May 2016 03:17 PM

திருப்பூர் வடக்கு, தெற்கில் தோல்வி: மக்களுடன் இடதுசாரிகள் இரண்டறக் கலக்கவில்லையா?

கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்டை என்று வர்ணிக்கப்படும், திருப்பூர் உள்ளிட்ட தொழிலாளர்கள் நிறைந்த மாநகரில் 6 கட்சிக் கூட்டணி அமைத்தும் இடதுசாரிகள் தோல்வி அடைந்திருப்பதும், வாக்கு வங்கி கடுமையாக சரிந்திருப்பதும் தொண்டர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.

திருப்பூரில் சமீபத்தில் தொழில் அமைப்புகளுடன் கையெழுத்தான தொழிலாளர்களின் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்கு வகித்தவை இடதுசாரிகளின் தொழிலாளர்கள் அமைப்புகள்தான். இதன்மூலமாக, சுமார் 3 லட்சம் பின்னலாடைத் தொழிலாளர்கள் பயனடைந்தனர்.

தொழிலாளர்கள் பிரச்சினைகள் மட்டுமின்றி, திருப்பூர் மாநகரில் கந்துவட்டி தொடங்கி சாக்கடை, குடிநீர் வசதி உட்பட பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்கும், அந்தந்த பகுதியிலுள்ள இடதுசாரிகளே முன்னின்று போராடினர். ஆனால், அவை வாக்குகளாக மாறவில்லை என்பது தான், தற்போதைய தேர்தலில் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகரில் காட்டுவளவு, தென்னம்பாளையம், பட்டுக்கோட்டையார் நகர், வெள்ளியங்காடு, முருங்கப் பாளையம், ஓடக்காடு, 15 வேலம்பாளையம், அனுப்பர் பாளையம், செட்டிபாளையம், தொட்டியபாளையம், எம்.எஸ்.நகர் ஆகிய பகுதிகளில் இடதுசாரி அமைப்புகள் வலுவாக உள்ளன.

ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதியில் இடதுசாரிகளுடன், கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் சேர்ந்து பெற்ற வாக்குகளை கணக்கிடும்போது, ஏமாற்றமாக இருக்கிறது என்கின்றனர் மக்கள் நலக் கூட்டணியினர்.

1980-க்கு பின்புதான் திருப்பூரில் பின்னலாடைத் தொழில் வேகமாக வளர்ச்சியடையத் தொடங்கியது. அதனுடன், இடதுசாரிகளும் தங்களை வலுப்படுத்திக்கொண்டே வளர்ந்தனர். இன்றைக்கு திமுகவில் இருக்கும் கோவிந்தசாமி, சிபிஎம் சார்பில் திருப்பூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக 1989-ம் ஆண்டு முதன் முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி உறுப்பினர் ஆவார்.

1991-ம் மீண்டும் போட்டியிட்ட கோவிந்தசாமி, 55 ஆயிரம் வாக்குகள் பெற்று 2-ம் இடம் பிடித்தார். 1996-ம் ஆண்டு சிபிஐ வேட்பாளர் கே.சுப்பராயன் வெற்றி பெற்றார். 2001-ம் ஆண்டு, இடதுசாரிகள் ஆதரவோடு அதிமுகவின் சிவசாமி வெற்றி பெற்றார். 2006-ல் திமுக அணி சார்பில் போட்டியிட்ட இடதுசாரி வேட்பாளர் கோவிந்தசாமி, ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பின்னர் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, திமுகவில் சேர்ந்தார்.

2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பில் திருப்பூர் தெற்கு, வடக்கு என 2 தொகுதிகள் உருவாயின. திருப்பூர் தெற்கு தொகுதியில் அதிமுக, தேமுதிக, சிபிஐ ஆதரவுடன் சிபிஎம் வேட்பாளர் கே.தங்கவேல் வெற்றி பெற்றார்.

ஆனால், 2016-ல் மீண்டும் போட்டியிட்ட அவர் 13,597 வாக்குகளையே பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் என்.பாயிண்ட் மணி 7,640 வாக்குகள் பெற்றுள்ளார். திருப்பூர் வடக்கில் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் எம்.சுப்பிரமணியன் (எ) ரவி பெற்ற வாக்குகள் 20,061.

கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நின்றபோதும் திருப்பூர் தொகுதியில், இடதுசாரிகளின் வேட்பாளர் சுப்பராயன் சுமார் 34 ஆயிரம் வாக்குகள் பெற்றார்.

இதுகுறித்து, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இடதுசாரி கட்சியினர் சிலர் கூறும்போது, ‘ஊழல் செய்தாலும், சிறைக்குச் சென்றாலும் திமுக, அதிமுக அணிகள் தான் தமிழக தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பவையாக உள்ளன எனும் எண்ணம், மக்களின் மனதில் ஆழமாக வேரூன்றியுள்ளது.

இடதுசாரிகள் தொடர்ந்து மக்களுக்காகப் போராடினாலும், அதனை ஒரு வட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ் வாங்கித் தரும் பணி போலத்தான் மக்கள் நினைக்கின்றனர். இடதுசாரிகள், மக்களுடன் இரண்டறக் கலக்கவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன, இதை ஏற்றுக்கொள்கிறோம். கட்சியில் இளம் ரத்தம் பாய்ச்ச வேண்டும்.

கடந்த காலங்களில் திமுக, அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்டதும், இடதுசாரிகளின் தற்போதைய பின்னடைவுக்குக் காரணம். ஆனால், மக்கள் மத்தியில் மாற்று அரசியல் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் போராடுவோம்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x