Published : 16 Jun 2022 09:04 PM
Last Updated : 16 Jun 2022 09:04 PM
கோவை: கோவை - மேட்டுப்பாளையம் இடையே வரும் 20-ம் தேதி முதல் கூடுதலாக 2 முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை - மேட்டுப்பாளையம் இடையே தற்போது 3 முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கூடுதலாக 2 ஜோடி ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, "கோவை - மேட்டுப்பாளையம் இடையே முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்:06814), கோவையிலிருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட்டு, நண்பகல் 12.35 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். மேட்டுப்பாளையம்-கோவை இடையிலான முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்:06815), மேட்டுப்பாளையத்தில் இருந்து பிற்பகல் 1.05 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 1.50 மணிக்கு கோவை வந்தடையும்.
இரவில் ரயில் இயக்கம்: கோவை - மேட்டுப்பாளையம் இடையே முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்:06822), கோவையிலிருந்து இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு, இரவு 9.10 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். மேட்டுப்பாளையம் - கோவை இடையிலான முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்:06823), மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு, இரவு 8 மணிக்கு கோவை வந்தடையும். இந்த ரயில்கள் அனைத்தும் வரும் 20-ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் இயக்கப்படும்.
இந்த ரயில்கள், கோவை வடக்கு, துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை ரயில் நிலையங்களில் தலா ஒரு நிமிடம் நின்று செல்லும். கோவை - மேட்டுப்பாளையம் இடையே எந்த ரயில்நிலையத்தில் ஏறி இறங்கினாலும், இந்த ரயிலில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படும். எனவே, தினசரி இந்த வழித்தடத்தில் பயணிப்போர் ரூ.185 செலுத்தி மாதாந்திர சீசன் டிக்கெட் பெற்றுக்கொண்டு கோவை - மேட்டுப்பாளையம் இடையே பயணிக்கலாம்.
இதுதவிர, 3 மாதங்களுக்கு சேர்த்து ரூ.500 செலுத்தி சீசன் டிக்கெட் பெற்றும் பயணிக்கலாம். சீசன் டிக்கெட் பெற விண்ணப்பதுடன் ஒரு புகைப்படம், ஆதார் அட்டை நகலை அளித்தால் போதுமானது. அவர்களுக்கு அடையாள அட்டையுடன் சீசன் டிக்கெட் வழங்கப்படும்'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT