Published : 16 Jun 2022 08:08 PM
Last Updated : 16 Jun 2022 08:08 PM

கல்வி நிறுவனங்களில் முக்கவசம், நடமாடும் பரிசோதனை மையம்: சென்னையில் கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்

சென்னை: மாணவர்களை முகக்கவசம் அணிய கல்வி நிறுவனங்கள் அறிவுறுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சியின் சார்பில் அனைத்து கல்வி நிறுவனங்களும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் கரோனா தொற்று கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று வரை சென்னையில் 981 நபர்கள் தொற்று பாதித்து சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 864 நபர்கள் வீட்டுத் தனிமையிலும், 49 நபர்கள் தனியார் மருத்துவமனைகளிலும், 30 நபர்கள் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தொடர்பில் இருந்த நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்று மட்டும் தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்த 797 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் மாநகராட்சியின் சார்பில் தொலைபேசி வாயிலாக அழைத்து உடல்நிலை குறித்து கேட்டறியப்பட்டது. இதில் 5 நபர்களுக்கு தொற்றுக்கான அறிகுறி சற்று அதிகமாக இருந்ததால் இவர்கள் மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சியின் 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 16 நகர்ப்புற சமுதாய நல மையங்களில் இலவசமாக பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு சற்று அதிகமாக உள்ள மண்டலங்களான அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில் ஒரு மண்டலத்திற்கு இரண்டு என மொத்தம் 8 நடமாடும் பரிசோதனை குழுக்கள் நாளை முதல் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த மண்டலங்களைச் சார்ந்த பொதுமக்கள் 1913 உதவி எண்ணில் தகவல் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு நடமாடும் குழுக்களின் மூலமாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

எனவே காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் உள்ள நபர்கள் உடனடியாக அருகிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று பாதித்த நபர்களுக்கும் தொற்றிற்கான அறிகுறியுள்ள நபர்களுக்கும் மாநகராட்சியின் சார்பில் இலவசமாக பாரசிட்டமால், விட்டமின் சி, ஜிங்க் ஆகிய மாத்திரைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் தலா 500 மாத்திரை தொகுப்புகள் தயார்நிலையில் உள்ளன. நேற்று வரை 186 நபர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் மருந்து தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கல்வி நிறுவனங்கள் மாணவர்களை முகக்கவசம் அணிய அறிவுறுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சியின் சார்பில் அனைத்து கல்வி நிறுவனங்களும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து பரிசோதனை மேற்கொள்ளும் தனியார் ஆய்வகங்கள் பரிசோதனை முடிவுகளையும், தனியார் மருத்துவமனைகள் தொற்று அறிகுறியுடன் சிகிச்சை பெறும் நபர்களின் விவரங்களையும், ஸ்கேன் மையங்களில் தொற்று அறிகுறியுடன் பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களின் விவரங்களையும் மாநகராட்சிக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x