Published : 16 Jun 2022 07:38 PM
Last Updated : 16 Jun 2022 07:38 PM
கோவை: “உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போலவே அக்னி வீரர் திட்டத்தில் தேர்வானவர்களுக்கு தமிழகத்திலும் காவல் துறை பணியில் இடஒதுக்கீடு அறிவிக்க வேண்டும்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்ற பயனாளிகளை கோவையில் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் இன்று (ஜூன் 16) சந்தித்து கவுரவித்தார். இந்த சந்திப்பில் கலந்துகொண்டபின் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியது: ''அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதேபோல, முப்படைகளில் 4 ஆண்டுகள் பணியாற்றும் 'அக்னி வீரர்' திட்டத்தையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசத்தில் அக்னி வீரர் திட்டத்தில் தேர்வானவர்களுக்கு எப்படி பணியில் இடஒதுக்கீடு அறிவித்துள்ளார்களோ, அதேபோல தமிழகத்திலும் காவல்துறை பணியில் இடஒதுக்கீடு அறிவிக்க வேண்டும்.
தமிழக மின்சார வாரியத்தின் மின் திட்ட ஒப்பந்தம் அனைத்து விதிகளையும் மீறி பி.ஜி.ஆர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. எங்களிடம் உள்ள ஆதாரத்தில் இருந்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தப்பிக்க முடியாது. தற்போதுள்ள தமிழக அரசு மாறும்போது முதல்நாள் முதல் ஆளாக செந்தில்பாலாஜி கைது செய்யப்படுவார்.
அதிமுக உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிட்டது இல்லை. தலையிடப்போவதும் இல்லை. பாஜக தனிமனிதர்களை எப்போதும் முன்னிலைப்படுத்தாது. எப்போதும் சித்தாந்ததை முன்னிலைப்படுத்துவோம். கட்சியின் தொண்டர்களை முன்னிலைப்படுத்துவோம்.
தனியார் மூலம் இயக்கப்பட்ட கோவை - ஷீரடி இடையிலான ரயிலில், தங்களுக்கு எந்த வசதி தேவையோ அதை தேர்ந்தெடுத்து மக்கள் பயணித்துள்ளனர். இந்த ரயிலில் செல்லுங்கள் என யாரும் கட்டாயப்படுத்தவில்லை. இது தவறு என்று கூற காரணங்கள் ஏதும் இல்லை. இந்த வசதி வேண்டாமெனில், சாதாரண ரயிலில் ஷீரடி செல்லவும் ரயில் உள்ளது. அந்த ரயில் நிறுத்தப்படவில்லை.
உக்ரைனில் இருந்து கஷ்டப்பட்டு, இந்திய மாணவர்களை மீட்ட அரசுக்கு அவர்களின் வாழ்க்கையும் காப்பாற்ற தெரியும் என மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே, அரசு நல்ல முடிவு எடுக்கும்'' என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT