Published : 12 May 2016 06:44 PM
Last Updated : 12 May 2016 06:44 PM
இலங்கையில் தூக்குத் தண்டனையில் இருந்து விடுதலையான தங்கச்சிமடம் மீனவர்கள் ஒன்றரை ஆண்டுகள் கழித்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
கடந்த நவம்பர் 28, 2011 அன்று தங்கச்சிமடத்தை சார்ந்த எமர்சன், பிரசாத், லாங்லெட், வில்சன் மற்றும் அகஸ்டஸ் ஆகிய தமிழக மீனவர்கள் ஐந்து பேர் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கிளாடுவின் என்பவருக்கு சொந்தமான மீன் பிடி விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்றனர். மீனவர்கள் கச்சத்தீவுக்கு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு அடைக்கப்பட்டனர். பின்னர் மீனவர்கள் மீது போதைப் பொருள் கடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இலங்கை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த 30.10.2014 அன்று, போதை மருந்து கடத்திய குற்றத்திற்காக தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மீனவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்றும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு தொடர்ந்து இரண்டு வாரங்களாக ராமேசுவரம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தின.
இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடி அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் தூக்கு தண்டனை பெற்றுள்ள 5 தமிழக மீனவர்கள் குறித்து தொலைபேசி மூலம் பேசினார். அப்போது நடந்த ஆலோசனையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை தமிழக சிறைக்கு மாற்ற ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டது.
பின்னர் மீனவர்கள் ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டிருந்த மேல்முறையீட்டு மனு வாபஸ் பெறப்பட்டு அதிபர் ராஜபக்சேவால் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டனர்.
தூக்குத் தண்டனையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கழித்து நாகப்பட்டிணம் மாவட்டம், வேதாரண்யம் தேத்தாக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் முன்னர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து 5 மீனவர்களும் நன்றி தெரிவித்தனர்.
பிரதமரைச் சந்தித்தது குறித்து ஐந்து மீனவர்களும் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கொழும்பு வெளிக்கடை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதும் ஐந்து பேரும் கடந்த 20.11.2014 அன்று விமானம் மூலம் டெல்லி வந்து சேர்ந்தோம். அப்போது பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் நாங்கள் பிரதமரை சந்திக்க முடியாமல் டெல்லியிலிருந்து தங்கச்சிமடம் திரும்பினோம்.
பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர முயற்சிகளின் பயனால் நாங்கள் தூக்குத் தண்டனையிலிருந்து மட்டுமல்லாமல் சிறைத் தண்டனையிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டோம். அதற்காக வேதாரண்யத்தில் பிரதமரை சந்தித்து எங்களின் நன்றியை தெரிவித்துக் கொண்டோம், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT