Published : 16 Jun 2022 05:58 PM
Last Updated : 16 Jun 2022 05:58 PM

மதுரை அரசு மருத்துவமனையில் ரூ.6 கோடியில் அமைகிறது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஜெயில் வார்டு அருகே ரூ.6 கோடியில் மருத்துவக் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. 4 மாதத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுவிடும் என்று மருத்துவமனை முதல்வர் ரத்தினவேலு கூறியுள்ளார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 3500 உள் நோயாளிகள், 15 ஆயிரம் வெளி நோயாளிகள் சிகிச்சைக்கு வருகிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப்பணியாளர் 1000 பேர், பார்வையாளர்கள் 10 ஆயிரம் பேர் வருகிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளன.

ஒவ்வொரு வார்டிலும் கழிப்பிட அறைகள், குளியல் அறைகள், பொதுக்கழிப்பிட அறைகள், சலவைக்கூடம் உள்ளன. அதனால், ஒரு நாளைக்கு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு 18 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இந்த தண்ணீர் அனைத்தும் மருத்துவப் பயன்பாடு, கழிப்பிட அறை மற்றும் சலவைக்கூடம் பயன்பாட்டிற்கு பிறகு கழிவு நீராகதான் வெளியேறுகிறது.

இந்தக் கழிவு நீர் சுத்திகரித்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட வேண்டும். ஆனால், இதுவரை கழிவு நீர் சுத்திகரித்து அனுப்பப்படவில்லை. அதனால், மருத்துவமனையில் வெளியேறும் மருத்துவக்கழிவு நீர் அனைத்தும், மாநகராட்சி பாதாளசாக்கடை கழிவு நீர் குழாயில் சென்று, வைகை ஆற்றில் கலந்து கொண்டிருக்கிறது. மருத்துவக் கழிவு நீர் கலப்பதால் வைகை ஆற்றின் நீர் வளமும், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளது. மீன் வளம் முற்றிலும் அழிந்தே விட்டது.

மாநகராட்சி நிர்வாகம், தற்போது வைகை ஆற்றில் கழிவு நீர் கலக்கவிடும் தனியார் நிறுவனங்களுக்கு "நோட்டீஸ்" வழங்கி அவற்றை சுத்திரித்து அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும், குடியிருப்பு பகுதிகளின் கழிவு நீர், மாநகராட்சி கழிவு நீர் வைகை ஆற்றில் கலக்காமல் இருக்க தற்போது வைகை ஆற்றின் வட கரை மற்றும் தென் கரைப்பகுதியில் பாதாளசாக்கடை அமைத்துக் கொண்டிருக்கிறது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும் கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியே விடக்கூடாது என்றும், சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.6 கோடியில் மருத்துவக் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது.

இது குறித்து மருத்துவமனை டீன் ரத்தினவேலு கூறும்போது, "மருத்துவமனை வளாகத்தில் ஜெயில் வார்டு அருகே ரூ.6 கோடியில் மருத்துவக் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. கட்டுமானப்பணி மருத்துவ 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இன்னும் 4 மாதத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுவிடும். தற்போது மருத்துவமனை கழிவு நீரை பாதுகாப்பாக மாநகராட்சி கழிவு நீர் குழாயில்தான் விடுகிறோம். திறந்த வெளியில் விடுவதில்லை.

சுத்திகரிப்பு நிலையம் அமைத்தப்பிறகு கழிவு நீரை சுத்திகரித்து மறுசுழற்சி செய்து மருத்துவமனையில் உள்ள அனைத்து வார்டுகளின் கழிப்பிட அறைகளுக்கு பயன்படுத்த உள்ளோம். இந்த சுத்திகரிப்பு நிலையம் ஜைக்கா திட்டத்தில் கட்டப்படுகிறது" என்று ரத்தினவேலு கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x