Published : 16 Jun 2022 04:37 PM
Last Updated : 16 Jun 2022 04:37 PM
சென்னை: "அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளைத் தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரத்தைச் சேர்ந்த சரண்யாவும், மோகனும் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களைப் பெண்ணின் சகோதரனும், மைத்துனனும் விருந்து வைப்பதாகக் கூறி, வீட்டுக்கு அழைத்து வெட்டிப்படுகொலை செய்திருக்கிற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன்.
தங்களது விருப்பத்தின் பெயரில், காதலித்து, சாதியை மறுத்து திருமணம் செய்து கொண்டதாலேயே, குடும்பத்தினரால் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதை, ‘சாதிய ஆணவப்படுகொலை’ என்றே பதிவுசெய்ய வேண்டும். அவ்வாறு பதிவுசெய்ய மறுப்பதும், இதனைப் பழிவாங்கும் போக்கோடு நிகழ்த்தப்பட்ட கொலையென்றுகூறி சுருக்குவதும் ஏற்புடையதல்ல.
18 வயதினைப் பூர்த்திசெய்த எவரும் மனமொத்து திருமணம் செய்துகொள்வதற்கு சட்டமும், ஜனநாயக அமைப்பு முறைகளும் வழியேற்படுத்தி இருக்கிற நிலையில், சாதியின் பெயரால் நடக்கிற கோரமான இத்தகைய ஆணவக்கொலைகள் கடும் கண்டனத்திற்குரியவையாகும்.
அறிவியலும், விஞ்ஞானமும் வளர்ச்சிபெற்று குடிமைச்சமூகமாக வாழ்ந்து வருகிற 21 ஆம் நூற்றாண்டிலும் சாதியின் பெயரால் நடக்கிற படுகொலைகள் ஒட்டுமொத்தச் சமூகத்தையும் வெட்கித் தலைகுனியச்செய்கின்றன. பிறப்பின் வழியே பேதம் கற்பித்து, மானுடச்சமூகத்தைப் பிளந்து பிரிக்கிற சாதி எனும் வருணாசிரமக்கட்டமைப்பை எதன்பொருட்டும் ஏற்க முடியாது.
மனித மனங்களில் புரையோடிப் போயிருக்கிற சாதி எனும் சமூகப்புற்றால் நிகழ்ந்தேறும் வன்முறைகளும், தீண்டாமைக் கொடுமைகளும், ஆணவப் படுகொலைகளும் கடும் கண்டனத்திற்குரியதாகும். இவற்றை சட்டத்தின் துணைகொண்டு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டியது அரசின் தார்மீகக்கடமையும், சமூகப்பொறுப்புமாகும்.
ஆகவே, கும்பகோணம் தம்பதிகளான சரண்யா – மோகன் மரணத்திற்குக் காரணமான கொலைகளைக் கடுஞ்சட்டத்தின் கீழ் பிணைத்து, அவர்களுக்கு உரிய தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும், அதிகரித்து வரும் ஆணவக்கொலைகளைத் தடுக்க தனிச்சட்டமியற்ற வேண்டுமெனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT