Published : 16 Jun 2022 01:33 PM
Last Updated : 16 Jun 2022 01:33 PM
மதுரை: ''திமுக ஆட்சிக்கு வந்ததுமே கொடுத்திருந்தால் குடும்பத் தலைவிகள் ஒவ்வொருக்கும் இதுவரை ரூ.12,000 கிடைத்திருக்கும். ஆனால், இதுவரை வழங்கவில்லை” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
மத்திய பாஜக அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது: ''தமிழகத்தில் சினிமா மாடல் ஆட்சி நடைபெறுகிறது. குற்றவாளிகள் தைரியமாக வீதிகளில் வலம் வந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல் நிலையங்களுக்கு ஆய்வுக்கு சென்றதில் இருந்துதான் தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளது. திமுக மாவட்ட செயலர்கள், ஒன்றிய செயலர்கள் காவல் நிலையங்களுக்கு சென்று கட்டப்பஞ்சாயத்து செய்கின்றனர்.
தமிழக போலீஸாரின் கைகள் கட்டப்பட்டுள்ளது. போலீஸார்களை சுதந்திரமாக செயல்படவிடவில்லை. திமுக ஆட்சியால் காவல்துறைக்கு மிகப் பெரிய களங்கம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக கூட்டு பலத்காரம் என்ற வார்த்தை இப்போது அதிகளவில் பேசப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பாலியல், கூட்டு பலாத்காரம், கொள்ளை, கொலை, வழிப்பறிகள் அதிகரித்துள்ளன.
மதுரையைச் சேர்ந்த பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்து வருகிறார். மதுரை ஜாயின்ட் 4 பத்திரப் பதிவாளரை காலையில் திண்டுக்கல்லுக்கு இடமாறுதல் செய்கிறார். அதே நாள் மாலையில் மதுரையில் இன்னொரு பதிவுத்துறை அலுவலகத்துக்கு மாற்றப்படுகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் 2500 ஏக்கர் போலியாக பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது. பாஜகவின் போராட்டம் காரணமாக போலி பத்திரப்பதிவு 24 மணி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதைப்பற்றி கவலைப்படாமல் மதுரையில் எங்கு ஜல்லி, மண் கிடைக்கும் என்பதை மட்டுமே அமைச்சர் மூர்த்தி சிந்தித்து வருகிறார்.
மதுரையில் மற்றொரு அமைச்சர் பி.டி.ஆர் பற்றி சொல்லத் தேவையில்லை. அவர் எப்போது பார்த்தாலும் நான் யார் தெரியுமா? என் குடும்பம் எப்படிப்பட்டது என்பது தெரியுமா? என்று தான் பேசுவார். ஆனால் ஜிஎஸ்டி கூட்டங்களுக்கு போகமாட்டார். ஜிஎஸ்டி நிலுவை தொகை எவ்வளவு என்பது பிடிஆருக்கு தெரியாது. ஒவ்வொரு மாதம் ஒவ்வொரு தொகையை சொல்கிறார். தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.9600 கோடி ஜிஎஸ்டி நிலுவை தொகையை வழங்கிவிட்டது. தற்போது ஜிஎஸ்டி நிலுவை தொகை பாக்கி இல்லை.
பிடிஆரிடம் பெட்ரோல், டீசல் விலையை எப்போது குறைப்பீர்கள் என்றால், டீசல் வாகனங்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்த பிறகு விலை குறைக்கப்படும் என 8 மாதங்களுக்கு முன்பு கூறினார். இந்நேரம் அமைச்சர் பிடிஆர் சென்னையிலிருந்து நடந்து சென்றிருந்தாலே டீசல் வாகனங்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்திருக்கலாம். ஆனால் மத்திய அரசு சொல்லாமலேயே பெட்ரோல், டீசல் விலையை கடுமையாக குறைத்துள்ளது.
இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 விரைவில் தரப்படும் என அமைச்சர் பிடிஆர் பேசியுள்ளார். 6 மாதத்துக்கு ஒரு முறை அவர் இவ்வாறு பேசுவார். ஆட்சிக்கு வந்ததும் கொடுத்திருந்தால் இல்லத்தரசிகள் ஒவ்வொருக்கும் இதுவரை ரூ.12 ஆயிரம் கிடைத்திருக்கும். ஆனால், இதுவரை வழங்கவில்லை. அதுபற்றி கேட்டால் இல்லத்தரசிகளை கண்டுபிடிக்க குழு அமைத்திருப்பதாக கூறுகின்றனர். தமிழக அரசு இதுவரை 21 குழுக்களை அமைத்துள்ளது. பிடிஆர் தலைமையில் மற்றொரு குழு அமைத்து இல்லத்தரசிகளை விரைவில் கண்டுபிடித்து ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை வழங்க வேண்டும்'' இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT