Published : 16 Jun 2022 01:03 PM
Last Updated : 16 Jun 2022 01:03 PM
சென்னை: தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இம்மாதம் 20-ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மே 6 முதல் 30 ம் தேதி வரை நடைபெற்றது. 9.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதினர். விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் 2-ல் தொடங்கி 10-ம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில், நாளை (ஜூன் 17) காலை 9 மணிக்கு 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளம் வழியாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இதை மாற்றி 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 20-ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதன்படி வரும் 20-ம் தேதி காலை 9.30 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். இந்த முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in உள்ளிட்ட வலைதளங்களில் தெரிந்துகொள்ளலாம்.
மேலும், மாணவர்களின் மதிப்பெண், செல்போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பிவைக்கப்படும். பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5-ம் தேதி தொடங்கி மே 28-ம் தேதி வரை நடைபெற்றது. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23-ம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது, இந்த இரண்டு பொதுத் தேர்வு முடிவுகளும் ஒரே தேதியில் வெளியிடப்படுகிறது.
10 மற்றும் 12-ம் தேதி முடிவுகளை தனித் தனியாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது இரண்டு தேர்வு முடிவுகளும் தயாராகிவிட்டதால் ஒரே தேதியில் முடிவுகள் வெளியிடலாம் என்று முடிவு செய்து, 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதைப்போன்று ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூன் 23-ம் தேதிக்கு முன்பே வெளியிடப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT