Published : 15 Jun 2022 11:21 PM
Last Updated : 15 Jun 2022 11:21 PM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏற்பட்ட விபத்தில் கிராம உதவியாளர் உயிரிழந்ததையடுத்து, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி அருகே இடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் (29). இவர் ஆளப்பிறந்தான் பகுதியில் கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், செந்தில் இன்று (ஜூன் 15) குடிக்காடு கண்மாயில் மண் அள்ளப்படுவது குறித்து வந்த புகார் தொடர்பாக நேரில் சென்று விசாரித்துவிட்டு அந்த தகவலை ஆளப்பிறந்தான் பகுதி சாலையோரமாக நின்று செல்போனில் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அறந்தாங்கி நோக்கி சென்ற ஒரு கார் செந்தில் மீது மோதியதில் அந்த இடத்திலேயே பரிதாபமாக அவர் உயிரிழந்தார். அறந்தாங்கி போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இதற்கிடையில் செந்திலின் இறப்பில் சந்தேகம் இருப்பதால், சந்தேக மரண வழக்காக பதிவு செய்ய வேண்டும். உரிய நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் தினேஷ்குமார், வட்டாட்சியர் காமராஜ் உள்ளிட்டோர் உறவினர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தினால் அறந்தாங்கி - பட்டுக்கோட்டை சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT