Published : 15 Jun 2022 08:24 PM
Last Updated : 15 Jun 2022 08:24 PM
புதுச்சேரி: புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் இறுதி வாக்காளர் பட்டியலை தனது இணையத்தில் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதுமுள்ள மாநில தேர்தல் ஆணையங்கள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்துள்ள தீர்ப்பையும் பதிவேற்றியுள்ளதாக அரசியல் கட்சியினருக்கு மாநிலத் தேர்தல் ஆணையர் தாமஸ் பி ராய் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு பல்வேறு காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற பணிகள் நடந்தன. பல காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டன. சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை இரு முறை மட்டுமே புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடந்துள்ளது.
தற்போது புதுச்சேரியில் உள்ள நான்கு பிராந்தியங்களிலும் (புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம்) 5 நகராட்சிகள் மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்துகளில் உள்ள 1,149 பதவிகளுக்கும் (5 நகராட்சி தலைவர் பதவிகள், 116 நகராட்சி கவுன்சிலர் மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்துகளில் உள்ள 108 கொம்யூன் பஞ்சாயத்து கவுன்சில் உறுப்பினர், 108 கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் 812 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்) உள்ளாட்சி தேர்தல் நடக்குமா என்று மக்கள் காத்துள்ளனர்.
இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையர் தாமஸ் பி. ராய் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ''வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி முதல் வாரத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலில் 10 லட்சத்து 10 ஆயிரத்து 593 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். அதில் 4 லட்சத்து 75 ஆயிரத்து 153 பேர் ஆண்கள், 5 லட்சத்து 35 ஆயிரத்து 320 பெண்கள் என 120 பேர் திருநங்கைகள் உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் மாநில தேர்தல் ஆணைய இணையத்தில் (www.sec.py.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அனைத்து பிராந்தியங்களிலும் அதிகளவில் உள்ளனர். புதுச்சேரி பிராந்தியத்தில் உழவர்கரை நகராட்சியில் அதிகளவாக 2.49 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதேபோல் புதுச்சேரி பிராந்தியத்தில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்தில் அதிக வாக்காளர்களும் (1.08 லட்சம்), நெட்டப்பாக்கத்தில் குறைந்த வாக்காளர்களும் (41,291) உள்ளனர்.
காரைக்கால் பிராந்தியத்தில் திருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத்தில் அதிக வாக்காளர்களும், நிரவியில் குறைந்த வாக்காளர்களும் உள்ளனர்.
உச்ச நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பில் நாடு முழுவதுமுள்ள மாநில தேர்தல் ஆணையங்கள் உள்ளாட்சித்தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பு நகல் மாநில தேர்தல் ஆணைய இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது என்பதை தகவலுக்காக புதுச்சேரி மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்காகவும் தெரிவிக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT