Published : 15 Jun 2022 12:38 PM
Last Updated : 15 Jun 2022 12:38 PM
சென்னை: இருக்கன்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் உள்ள பயன்பாட்டில் இல்லாத பலமாற்றுப் பொன் இனங்கள் பிரித்து எடுக்கப்பட்டு, உருக்கி சுத்த தங்கக்கட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டு வங்கியில் முதலீடு செய்யப்பட்டு ரூ.10 கோடி மதிப்பீட்டிலான தங்க முதலீட்டுப் பத்திரத்தை கோயில் நிர்வாகிகளிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: சென்னை தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இருக்கன்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் உள்ள பயன்பாட்டில் இல்லாத பலமாற்றுப் பொன் இனங்கள் பிரித்து எடுக்கப்பட்டு, உருக்கி சுத்த தங்கக்கட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டு, பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டு, ரூ.10 கோடி மதிப்பீட்டிலான தங்க முதலீட்டுப் பத்திரத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 15) கோயில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.
கடந்த பத்து ஆண்டுகளாக திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களில், திருக்கோயிலுக்கு தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய இனங்களை மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றி, திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து, அதிலிருந்து வரும் வட்டி மூலமாக திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், இப்பணிகளைக் கண்காணிப்பதற்கு மூன்று மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையிலான குழுக்கள் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறையின் 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, திருக்கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி சுத்த தங்கக்கட்டிகளாக பெற்று வங்கியில் முதலீடு செய்தல் பணிக்காக தமிழகத்தின் சென்னை பகுதி, திருச்சிராப்பள்ளி பகுதி மற்றும் மதுரை பகுதி ஆகிய மூன்று பகுதிகளில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டது.
அதன்படி, சென்னை மண்டலம் - திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி, துரைசாமி ராஜு தலைமையிலும், திருச்சிராப்பள்ளி மண்டலம் - சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி க.ரவிச்சந்திர பாபு தலைமையிலும், மதுரை மண்டலம் – இருக்கன்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி, ஆர். மாலா தலைமையிலும், குழுக்கள் அமைக்கப்பட்டு, இத்திட்டம் 13.10.2021 அன்று தமிழக முதல்வரால், காணொலி காட்சி வாயிலாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
நீதிபதி தலைமையில் பிரித்தெடுக்கும் பணி முடிக்கப்பட்டு, 27250.500 கிராம் எடையுள்ள பலமாற்றுப்பொன் இனங்கள் 1.4.2022 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆகியோர் முன்னிலையில் மும்பையில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான உருக்காலைக்கு எடுத்துச் சென்று, அதனை உருக்கி சுத்த தங்கக்கட்டிகளாக மாற்றும்பொருட்டு சாத்தூர் கிளை பாரத ஸ்டேட் வங்கி மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்ட பொன் இனங்கள் 18.4.2022 அன்று மும்பையில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் வங்கி அதிகாரிகள் மற்றும் நீதிபதி தலைமையிலான குழுவின் முன்னிலையில் சுத்த தங்கக்கட்டிகளாக மாற்றப்பட்டு மும்பை SBI BULLION BRANCH-ல் கடந்த 29.4.2022 அன்று நிரந்தர முதலீடு செய்யப்பட்டது. அவ்வாறு முதலீடு செய்யப்பட்ட சுத்தத் தங்கக்கட்டிகளின் மதிப்பு ரூ.10 கோடி ஆகும். இதன் மூலம் ஆண்டிற்கு இருபத்தி நான்கு லட்சம் ரூபாய் வட்டித் தொகையாக திருக்கோயில் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.
மேற்படி தங்க முதலீட்டுப் பத்திரத்தை தமிழக முதல்வர் இருக்கன்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் நிர்வாகிகளிடம் இன்று ஒப்படைத்தார். இந்த முதலீட்டின் மூலம் பெறப்படும் வட்டித்தொகை அந்தந்த திருக்கோயிலின் திருப்பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கும் பயன்படுத்தப்படும்.
இந்த நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தர மோகன், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். மாலா, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் இரா. கண்ணன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT