Published : 15 Jun 2022 11:17 AM
Last Updated : 15 Jun 2022 11:17 AM
தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கோடுபட்டி அருகே மின்னல் தாக்கியதில் 25-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் கருகி உயிரிழந்தன.
பென்னாகரம் வட்டம் கோடுபட்டி அருகே வனத்தை ஒட்டி அமைந்துள்ள கிராமம் பன்னிகுழி. இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜி(55). இவர் மனைவி கோவிந்தம்மாள் (47). சிறு விவசாயிகளான இவர்கள் இருவரும் வாழ்வாதாரத்திற்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது, 50க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வைத்து வளர்த்து வந்தனர். அப்பகுதியை ஒட்டிய தரிசு நிலங்களிலும் வனத்தை ஒட்டிய பகுதிகளிலும் இந்த ஆடுகளை மேய்ப்பது வழக்கம்.நேற்று (செவ்வாய்) வழக்கம் போல் பகலில் ஆடுகளை மேய்த்து முடித்து மாலையில் பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு வீட்டுக்குச் சென்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை பென்னாகரம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த இடி மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது வானில் கிளம்பிய பலத்த மின்னல் ஒன்று தாக்கியதில் ராஜிக்கு சொந்தமான 25-க்கும் மேற்பட்ட ஆடுகள் கருகி உயிரிழந்தன. பட்டியில் ஆடுகளுக்காக அமைக்கப்பட்டிருந்த குடிசையும் தீப்பற்றி எரிந்து சேதமானது. இதர ஆடுகள் ஓடிச்சென்று உயிர்தப்பின.
இந்த சம்பவத்தால் விவசாயி ராஜியின் குடும்பத்தார் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர். ஆடுகள் மின்னல் தாக்கி உயிர் இழந்ததால் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ள நிலையில் அரசு சார்பில் நிவாரணம் வழங்கி உதவிட வேண்டும் என ராஜியின் குடும்பத்தார் கோரிக்கை வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT