Published : 15 Jun 2022 04:55 AM
Last Updated : 15 Jun 2022 04:55 AM

திருவல்லிக்கேணியில் 34 ஆண்டுகளாக ரூ.2-க்கு சிகிச்சை, மருந்து - ‘சைமா மருத்துவ மைய’த்தின் மகத்தான சேவை

சென்னை திருவல்லிக்கேணி, தேரடி வீதியில் உள்ள சைமா மருத்துவ மையத்தில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்.

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் கடந்த 34 ஆண்டுகளாக ரூ.2-க்கு மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகளை ‘சைமா மருத்துவ மையம்’ வழங்கி வருகிறது. இதன் சேவையால் ஏழைகளின் மாத மருத்துவச் செலவு வெகுவாக குறைந்திருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

தற்கால வாழ்க்கை முறையில் ஏழை, நடுத்தர குடும்ப வருவாயில் பெரும் பகுதியை மருத்துவத்துக்காகச் செலவிட வேண்டியுள்ளது. அன்றாட செலவுகளை சமாளிக்கவே கஷ்டப்படும் மக்களுக்கு இதுபோன்ற திடீர் மருத்துவ செலவுகள் பெரும் சுமையாக மாறி, அவர்களை தடுமாறச் செய்துவிடுகின்றன. இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணி தேரடி வீதியில் இயங்கி வரும் சைமா (SYMA) மருத்துவ மையம் இதுபோன்ற ஏழைகளின் மருத்துவச் செலவுகளை தாங்களே ஏற்றுக்கொண்டு, கடந்த 34 ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறது. இங்கு பதிவுக்கட்டணம் ரூ.2 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. பொது மருத்துவர் ஆலோசனை மட்டுமின்றி, மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இது, அப்பகுதி ஏழை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுதொடர்பாக சைமா மருத்துவ மையத்தின் துணைத் தலைவர் ஏ.வி.கஸ்தூரிரங்கன், ‘இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது:

சைமா மருத்துவ மையம் கடந்த 1988-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. அப்போது முதல் ரூ.2 பதிவுக் கட்டணம் மட்டுமே பெற்று பொது மருத்துவர் ஆலோசனை, மருந்து, மாத்திரைகளை இலவசமாக வழங்கி வருகிறோம். இங்கு தினமும் மாலை 4.30 முதல் 6.30 மணி வரை பொது மருத்துவர் ஆலோசனை வழங்கப்படும்.

ரத்த பரிசோதனை, அல்ட்ரா ஸ்கேன்

கடந்த 2007 முதல் நியூபெர்க் உடன் இணைந்து ரத்தப் பரிசோதனை நிலையமும் செயல்பட்டு வருகிறது. இது காலை 7 முதல் 11.30 மணி வரை செயல்படும். இங்கு சர்க்கரை பரிசோதனை உணவுக்கு முன்பு ரூ.30, உணவுக்கு பின் ரூ.30 மட்டுமே கட்டணமாக பெறுகிறோம். இதர ரத்த பரிசோதனைகளும் மலிவு விலையில் செய்யப்படுகிறது. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 முதல்6 மணி வரை வழங்கப்படுகிறது. இதற்கு ரூ.750 மட்டுமே கட்ட ணமாக வசூலிக்கப்படுகிறது.

இது மட்டுமல்லாது சிறப்பு மருத்துவர் ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. அதற்கு ரூ.50 பதிவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மருந்துகளை முடிந்தவரை நாங்களே கொடுத்துவிடுகிறோம். எங்களிடம் இல்லாத மருந்துகளை வெளியில் வாங்கிக்கொள்ள அறிவுறுத்துகிறோம். கண் மருத்துவ சிகிச்சை தினமும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படுகிறது.

குழந்தைகள் நல மருத்துவர் தினமும் காலை 11 முதல் பிற்பகல் 12.30 மணி, பிசியோ தெரபி மருத்துவர் காலை 10 முதல் 12 மணி வரை இருப்பார்கள். பிசியோதெரபி சிகிச்சைக்கு மட்டும் ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காது, மூக்கு தொண்டை, தோல், இதயம் மற்றும் நீரிழிவு நோய் மருத்துவர் பல் மருத்துவர்களும் வந்து சிகிச்சை அளிக்கின்றனர்.

மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவ சேவைகளையும் வழங்க திட்டமிட்டு வருகிறோம். சிறப்பு மருத்துவ சேவைகளை பெற 044-28445050 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ‘2 ரூபா கிளினிக்' என்ற கருப்பொருள் உருவானது தொடர்பாக சைமா முன்னாள் தலைவர் டி.ஜெ.ரமணி கூறியதாவது:

திருவல்லிக்கேணி பகுதியில் இருந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவர், ஏன் சும்மா பொழுதை கழிக்கிறீர்கள். ஆக்கப்பூர்வமாக பார்த்தசாரதி கோயில் குளத்தை சீரமைப்பது போன்ற பணிகளில் ஈடுபடுமாறு எங்களை வலியுறுத்தி வந்தார்.

பின்னர் 1977-ம் ஆண்டு திருவல்லிக்கேணியை சேர்ந்த நண்பர்கள்குழு, திருப்பதி மலையில் கால்நடையாக ஏறிச் சென்று கொண்டிருந்தபோது, நற்பணிகளை மேற்கொள்ள ஸ்ரீனிவாஸ் இளைஞர் நற்பணி மன்றம் (SYMA) தொடங்குவது என முடிவெடுத்தோம். முதலில் குளத் தூய்மை, தெரு தூய்மை, ரத்த தான முகாம்களை நடத்தினோம். பெசன்ட்நகரில் ‘காஞ்சி காமகோடி சங்கரா மெடிக்கல் ட்ரஸ்ட்'-ஐ சேர்ந்த மருத்துவர் ஸ்ரீதர் ரூ.2 கட்டணத்தில் மருத்துவ சேவை வழங்கி வந்தார்.

அவருடன் எங்களை இணைத்துக்கொண்டு திருவல்லிக்கேணியில் 1988-ம் ஆண்டு சைமா சார்பில் 2 ரூபா கிளினிக் தொடங்கினோம். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. 2009-ம் ஆண்டு முதல் நாங்களே நடத்தி வருகிறோம். இது இப்போது ஒரு மருத்துவமனையாக வளர்ந்திருக்கிறது. இதற்கு காரணம் பல்வேறு நல்ல உள்ளங்கள் தொடர்ந்து நிதி வழங்கி ஆதரவு அளிப்பதுதான். இவ்வாறு அவர் கூறினார்.

‘சைமா மருத்துவ மையம்’ தொடர்பான விரிவான விவரங்கள் வீடியோ வடிவில் இங்கே...

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x