Published : 15 Jun 2022 06:42 AM
Last Updated : 15 Jun 2022 06:42 AM

கட்சியினர் எதற்கும் அஞ்சாமல் போராட வேண்டும்: காங். தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தல்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதை கண்டித்து சத்தியமூர்த்தி பவன் நுழைவுவாயில் அருகே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. உடன் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் நிர்வாகிகள்.படம்: பு.க.பிரவீன்

சென்னை: காங்கிரஸ் கட்சியினர் எதற்கும் அஞ்சாமல் சித்தாந்த ரீதியாக போராட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதைக் கண்டித்து நேற்று முன்தினம் சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், 2-வது நாளாக நேற்றும் ராகுல் காந்தியை அமலாக்கத் துறை விசாரணைக்கு அழைத்ததைக் கண்டித்து, சென்னை சத்தியமூர்த்தி பவன் நுழைவுவாயிலின் அருகே கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் தொண்டர்கள் மத்தியில் கே.எஸ்.அழகிரி பேசியதாவது: நேஷனல் ஹெரால்டு பத்திரிகை ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது. இந்த பத்திரிகை காங்கிரஸ் கட்சியின் சொத்து. அனைத்தும் சட்டபூர்வமாகத் தான் நடந்தது. இன்றைக்கும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை காங்கிரஸிடம்தான் இருக்கிறது.

நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய நூபுர் ஷர்மாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும். அப்படிசெய்யவில்லை என்றால்தொடர்ந்து போராடுவோம்.காங்கிரஸ் கட்சியினர் எதற்கும் அஞ்சாமல் சித்தாந்த ரீதியாக போராட வேண்டும்.

ராகுல் காந்தியிடம் இவ்வளவு நேரம் கேள்வி கேட்க என்ன இருக்கிறது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகை எங்களுடைய சொத்து. நம்முடைய தலைவர்களை நேரடியாக குறிவைத்து தாக்குகிறார்கள். எனவே, காங்கிரஸார் கொள்கை ரீதியாக தயாராகி உறுதியாகப் போராட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x