Published : 15 Jun 2022 07:39 AM
Last Updated : 15 Jun 2022 07:39 AM

காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை இல்லை: உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் வேதனை

சென்னை

அண்மைக்காலமாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு எதிராக சுமத்தப்படும் ஜீரணிக்க முடியாத குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் வேதனை தெரிவித்துள்ளார்.

காவல்துறையைச் சேர்ந்த மாணிக்கவேல் என்பவர், தன்னைசென்னையில் உள்ள காவலர் குடியிருப்பில் இருந்து வெளியேற்ற பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக நடந்தது. அப்போதுசென்னை போலீஸ் குடியிருப்பு உதவி ஆணையர் மாத்யூ டேவிட்நேரில் ஆஜராகி மனுதாரர் தற்போது தான் காவலர் குடியிருப்பை காலி செய்துள்ளதாக தெரிவித்தார்.

அதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, காவல்துறையில் உயர் அதிகாரிகள் எதிர்பார்க்கும் அளவுக்கு ஒழுக்கத்துடன் செயல்படுவது இல்லை. அதனால், காவல்துறையை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அந்தஉயர் அதிகாரிகள் செயல் இழந்தவர்களாக உள்ளனர். காவல் உயர் அதிகாரிகள் தங்களது காருக்குள் யார் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு கண்ணாடிகளில் கருப்பு கலரில் கூலிங் பிலிம் ஒட்டியுள்ளனர்.

தனியார் வாகனத்திலும் காவல்துறை என எழுதி தவறாக பயன்படுத்துகின்றனர். ஆர்டர்லி முறை இன்னும் ஒழிக்கப்படவில்லை. அண்மைக்காலமாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு எதிராக சுமத்தப்படும் ஜீரணிக்க முடியாத குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தமிழக அரசுஎந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பது வேதனைக்குரியது.

மனுதாரரை கடந்த 2014-ம்ஆண்டே குடியிருப்பை விட்டு வெளியேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், தற்போது தான் அவர் வெளியேறியுள்ளார். அவருக்கு எதிராக அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது.

எனவே அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் உயர் அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசின் உள்துறைச் செயலர் வரும் ஜூன் 21-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x